வள்ளுவரின் உழவியல் பார்வை - 3

விவசாயப் பொருளாதாரம் பற்றி வள்ளுவர்: 

வளர்ந்த நாடுகளில் 10% மக்களும் வளரும் நாடுகளில் 60% மக்களும் தங்களின் வாழ்க்கையை வேளாண்மை மூலமே நடத்தி வருகின்றனர்.14 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 58% வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் தான் உள்ளன. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) 2011 கணக்கெடுப்பின் படி நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையும் அது சார்ந்த தொழிகளும் 14.2% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.15 பல நாடுகளில் பெரிய பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. ஆனால், அவை வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. இந்தியா இயற்கையால் வரமளிக்கப்பட்ட நாடு. இங்கே 62% நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற நிலமாக இருக்கிறது.11 
உழவுக்கு இன்றியமையாத தேவை நீர். முறையான பாசன வசதி இருந்தால்தான் நல்ல விளைச்சல் தர முடியும். நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாள்பவர்களுடையது. உழவர்களுக்குச் சிறந்த பாசன வசதி செய்து கொடுக்கும் மன்னர்களையே வரலாறு பேசும். கல்லணை கட்டிய கரிகாலனைத் தான் உலகம் இன்று வரை போற்றுகிறது.

“காடுகொன்று நாடாக்கி 
குளம் தொட்டு வளம்பெருக்கி” என்று பட்டினப்பாலையில் கரிகாலனை புகழ்ந்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடியுள்ளார்

நமது முக்கிய உணவான அரிசி, இந்தியாவில் பத்து கோடியே எண்பத்தைந்து லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு ஐயாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை என்கிறார்கள் நிபுணர்கள்.12 நம் நாட்டில் நதிகள் அனைத்தும் வற்றிக் கிடக்கும் நிலையில் மழையும் பொய்த்துப் போவதால் பூமியில் உள்ள நீரை உறிஞ்சிதான் பெரும்பாலான இடத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. எனவே, மழை நீர் சேமிப்பின் அவசியத்தை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துதான் வான் சிறப்பில் மழையின் முக்கியத்துவத்தையும் அதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் மக்கள் பட வேண்டிய துன்பங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

“விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
  துண்ணின் றுடற்றும் பசி”                                                     (வான் சிறப்பு: குறள் 13)

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
  பசும்போல் தலைகண் பரிது”                                              (வான் சிறப்பு: குறள் 16)

என்ற குறள்களின் மூலம் விளக்குகிறார். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாக வான் சிறப்பின் இறுதிக் குறளில் மழை இல்லையென்றால் உலகில் ஒழுக்கமே இருக்காது என்கிறார்.

“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு”                                               (வான் சிறப்பு: குறள் 20)

இதனால் உழவுக்குத் தேவையான நீர் வசதி பற்றியும் நம் நாட்டின் புவியியல் சூழலுக்கு ஏற்ற முறைகளை வள்ளுவர் தம் குறளில் விவரிக்கிறார்.
நம் நாட்டின் 70% மழையை நம்பிய மானாவாரி நிலங்கள். எனவே இங்கே நவீன வேளாண் முறைகளால் பயனில்லை. இந்த 70% ஏறத்தாழ 30% இடங்களில் தரிசு நிலச் சாகுபடி நடக்கிறது. அங்கு வருடாந்திர சராசரி மழை அளவு 400 மில்லி மீட்டர்.13 இந்த மழையைச் சரியாகப் பயன்படுத்தினால் சிறந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்யலாம். எனவே, நாம் மழை நீரை சேமிக்கும் சரியான திட்டங்களை வகுத்து அதைச் செயல்முறையிலும் கொண்டு வர வேண்டும்.

உழவர்களுக்கு வள்ளுவரின் வழிகாட்டல்: 
உழவர்கள் எந்த மாதிரியான பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று வள்ளுவர் பட்டியலிடவில்லை. ஆனால், உழவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு நலன்கள் பற்றியும் பொறுப்புணர்ச்சி பற்றியும் தன்னுடைய அறவுரையில் அறிவுறுத்தியிருக்கிறார்.

1. தன் பணி பற்றிய உயர்வெண்ணம்:
உலகின் அனைத்து மக்களுக்கும் உணவளிப்பது உழவர்கள்தான். எனவே அவர்கள் தங்கள் தொழில் மீது பற்றுக் கொள்ள வேண்டும். ‘வெள்ளைக் காலர் வேலை’ (White Collar Jobs) புரிபவர்களைப் பார்த்து தன்னுடைய தொழில் இழிவானது என்று ஓர் உழவன் எண்ணக் கூடாது. அவன் யாரிடமும் சென்று கையேந்துபவன் அல்ல. இல்லை என்று கையேந்தி வருபவர்களுக்கு மறைக்காமல் தந்து உதவுபவன்.
இக்கருத்தை,

“இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”                                                               (உழவு: குறள் 1035)

என்ற குறளில் பதிவு செய்கிறார்.

2. பொறுப்புணர்ச்சி: 
தன்னை நம்பித்தான் மற்றவர்கள் வேறு தொழில்களை மேற்கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய உழவன் தன்னுடைய பொறுப்புணர்ச்சியை உணர்ந்து செய்ய வேண்டும். அவனிடம் சோம்பல் இருக்கக்கூடாது. தன் நிலத்தை நாள்தோறும் சென்று கவனித்து வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் பொறுப்பில்லாத கணவனிடம் ஊடும் மனைவியைப் போல நிலமும் விளைச்சலின்றி அவனோடு பிணக்குக் கொண்டு விடும்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்”                                                                    (உழவு: குறள் 1039)

என்னும் குறளில் அழகாக விளக்கியுள்ளார்.

3. நேர மேலாண்மை: 
வேளாண்மையில் மேலாண்மை பேசிய முதல் அறிஞர் வள்ளுவராகத்தான் இருக்க முடியும். நேர மேலாண்மை இன்று எல்லாத் துறைகளிலும் முக்கியமான ஒன்று என்றாலும் உழவுக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், இந்தியா போன்ற நாடு பருவ மழையை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டும்.14 எனவே, சரியான பருவ காலத்தில் சோம்பியிருக்காமல் விதைக்க வேண்டும். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி காலத்தின் அவசியத்தை உணர்த்துவது. ‘காலமறிதல்’ அதிகாரத்திலே நேர மேலாண்மையை விரிவாகப் பேசுகிறார். சரியான சூழல் வைக்கும்போது சரியான முறையில் செய்தால் உலகமே கைகூடும் என்கிறார்.

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு”                                                         (காலமறிதல்: குறள் 482)

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்”                                                          (காலமறிதல்: குறள் 484)
என்ற இரு குறள்களும் உழவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்பு.

இன்றைய விவசாயப் பிரச்னைகளும் வள்ளுவரின் தீர்வுகளும்:
·
உழவுக்கு முக்கியத்துவம் அளிக்காத அரசு: 

இன்றைய சூழலில் இந்தியாவில் உழவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் சரிவரச் செய்து தரவில்லை. பெருகிவிட்ட தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் சுற்றுச் சூழல் மாசடைந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கிறது. இதனால் மழையும் பொழிவதில்லை. நெல்லை உரிய விலைக்கு யாரும் கொள்முதல் செய்வதில்லை. உணவை உற்பத்தி செய்த உழவனால் அதற்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்”                                     (ஆள்வினை உடைமை: குறள் 619)

என்று வள்ளுவர் கூறியபடி மெய் வருத்தி உழைத்துப் பார்க்கின்றனர். ஆனால், கூலி மட்டும் வந்தபாடில்லை. எனவே, விவசாயிகளால் தங்கள் தொழிலை செம்மையாகச் செய்ய முடியாத சூழலில் பல உழவர்கள் தங்கள் நிலங்களை மனைகளாக விற்று விட்டு வந்த பணத்தில் வேறு தொழில் பார்க்கின்றனர். அல்லது, வறுமை எய்தி தாளமுடியாமல் பல நூறு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அரசுக்கு எவ்வளவு பெரிய அவமானம்?

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு”                                                                      (நாடு: குறள் 740)

என்ற குறளில் ‘நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை’ என்று வள்ளுவர் கூறுவது நம் நாட்டுக்கு எவ்வளவு பொருத்தம்! எனவே நம் நாடு உழவுக்கு முக்கியத்துவம் அளித்தால் நம் நாட்டின் பொருளாதாரமும் சமூகப் பொருளாதாரமும் உயரும்.
· 
உணவைப் பகிர்ந்தளிப்பதில் சிக்கல்: 
கட்டுமான பணிகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் ஒருபக்கம் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில புதிய ரகப் பயிர் விதைகளால் குறைந்த நிலத்திலயே நல்ல விளைச்சலைத் தர முடிகிறது. எனவே, இங்கே உணவு பற்றாக்குறை இல்லை. ஆனால், உற்பத்தி செய்த உணவுப் பொருள்களைச் சரியான முறையில் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படவில்லை. அதுதான் சிக்கல். யாரோ ஒரு சிலருக்கு மட்டும் இந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் செல்கின்றன. மற்றவர்கள் வறுமையில் உழல்கின்றனர். எனவே, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உணவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை வள்ளுவர்,

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைதொருபாற்
கோடாமை சான்றோர் கணி”                                            (நடுவு நிலைமை: குறள் 118)

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.
· 
வறுமை: 
ஒரு நாட்டில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படவில்லையென்றால் அந்நாட்டு மக்கள் வறுமை எய்துவர். வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிக மக்களைக் கொண்டுள்ள நாடு வளராத நாடு என்றே பொருள்படும். வறுமை ஒரு நாட்டின் மதிப்பை உலக அரங்கில் குறைத்துவிடுகிறது. வறுமையின் கொடுமையை ‘நல்குரவு’ என்னும் அதிகாரத்திலே சொல்லி வருந்துகிறார் வள்ளுவர். நல்குரவை உழவுக்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. உழவு செழிக்கவில்லையென்றால் மக்கள் வறுமை எய்துவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே உழவின் தொடர்ச்சியாய் நல்குரை அமைத்துள்ளார்.

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
  இன்மையே இன்னா தது”                                                             (நல்குரவு: குறள் 1041)

வறுமையை விடக் கொடியது எது என்று யோசித்த வள்ளுவர் வறுமையே அந்த வறுமையை விடக் கொடியது என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால், இன்று நிலைமையோ வேறாக உள்ளது. தேவையான உணவை உழவர்கள் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். உற்பத்தி செய்த அவர்களோ வறுமையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இப்படி வறுமையில் வாடும் மக்களை ஒரு நாடு கொண்டிருக்குமானால் அந்நாட்டை ஆளும் அரசனும் பிச்சை எடுத்து அத்துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று வள்ளுவர் சாபமிடுகிறார்.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”                                                           (இரவச்சம்: குறள் 1062)

என்ற குறள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவது. இக்குறளில்
‘உலகியற்றியான்’ என்பதற்குப் பரிமேலழகர் தொடங்கி அனைத்து உரையாசிரியர்களும் உலகைப் படைத்த கடவுள் என்றே பொருள் எழுதியுள்ளனர். ஆனால், உலகியற்றியான் என்பது நாட்டைச் சட்டம் இயற்றி ஆளும் அரசனைத் தான் குறிக்கிறது.15
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி கொதித்ததும் இந்தக் குறளின் நீட்சி தான்.
·
வறுமையைப் போக்கும் வழிமுறை: 
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால், வள்ளுவர் இதை ஒப்பவில்லை. அன்னதானம் செய்வது சிறந்ததுதான். ஆனால், அது பசி என்னும் நோய்க்குத் தற்காலத் தீர்வு தான். நிரந்தரத் தீர்வைக் காண வழி வகைச் செய்ய வேண்டும் என்கிறார்.16
இதனை,

“ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”                                                                (ஈகை: குறள் 225)

என்று ஈகையிலே சொல்கிறார். எனவே, அறிவியல் அறிஞர்கள் வறுமை வராத சூழல் உருவாகும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

முடிவுரை: 

வள்ளுவர் உழவின் மீது கொண்டுள்ள பற்றையும் அதன் சிறப்பையும் இக்காலச் சிக்கல்களையும் தீர்வுகளையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்ந்தது. தொலை நோக்கு சிந்தனையாளர்களால் மட்டும்தான் உலகம் உய்யும் வழிமுறைகளைச் சொல்ல முடியும். அந்த வகையில் இன்று நம் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கண்டுபிடித்ததாகச் சொல்லும் நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு, பகிர்ந்தளிக்கும் முறை என்று பலவற்றையும் வள்ளுவர் அன்றே சொல்லியுள்ளார். அவரின் தொலை நோக்குப் பார்வை நம் புருவங்களை உயர்த்த வைக்கிறது. இன்றைய வாழ்வியலோடு ஒப்பிட்டு வள்ளுவத்தை ஆராய்ந்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும்.

உதவிய நூல்கள்: 
1. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
2. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of- south-india.html
3. புலவர் நன்னன், “திருக்குறள் மூலமும் விளக்க உரையும்”, ஏகம் பதிப்பகம், பக்கம் 492.
4. சாலமன் பாப்பையா, “திருக்குறள் விளக்கவுரை”.
5. டாக்டர். கோ. நம்மாழ்வார், “எந்நாடுடைய இயற்கையே போற்றி”, விகடன் பிரசுரம், ப 23.
6. “Illustrated Family Encyclopedia”, DK Publishers, Edition 2008, Page 326.
7. APJ Abdul Kalam & A. Sivathanu Pillai, “Envisioning and Empowered Nation – Technology for Societal Transformation”, Tata McGraw-Hill Publishing Company Ltd., Page 58.
8. டாக்டர். கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
9. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 7
10. . ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 10
11. “Manorama Year Book 2012”, Malayala Manorama Press, Page 674.
12. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம்.
13. ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் & ய.சு. ராஜன், “இந்தியா 2020 (மாணவர்களுக்கு)”, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 46
14. “Thiruvalluvar and Agricultural economy”, http://snalapat.blogspot.in/2010/05/agroeconomy-of-south-india.html
15. புலவர் மு. அருச்சுனன், “திருக்குறள் புதிய பார்வை”, பாரதி பதிப்பகம், பக்கம் 114
16. டாக்டர்.கோ. நம்மாழ்வார், “உழவுக்கும் உண்டு வரலாறு”, விகடன் பிரசுரம், பக்கம் 82

உரை நூல்கள்: 
1) திருக்குறள் – கலைஞர் உரை
2) திருக்குறள் – பரிமேலழகர் உரை
3) திருக்குறள் – சாலமன் பாப்பையா உரை
4) திருக்குறள் – புலவர் நன்னன் உரை
5) திருக்குறள் வாழ்வியல் உரை – மதுரை இளங்குமரனார்
6) திருக்குறள் – மணக்குடவர் உரை







கருத்துரையிடுக

0 கருத்துகள்