செகாவும் ஜெ.கே வும்


மு.கு: ஜெயகாந்தனின் முதலாமாண்டு நினைவாக...இக்கட்டுரை.

எப்போதும் மழை இல்லை, மழை இல்லை என்றே புலம்பிய நமக்கு (எல்லோரும் புலம்பினோமா என்ன?) சென்ற ஆண்டு ‘மினி சுனாமி’ போல் சென்னை, கடலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளை இயற்கை தன் பேராற்றலின் சிறு துளி கொண்டு எச்சரித்துப் போனது. மழையின் கொடூரங்களைத் தாங்க முடியவில்லை என்று எல்லோரும் தவித்தனர். உண்மையில் அது மழையின் கொடூரமா அல்லது மனிதக் கொடூரமா? விவாதம் பிறகு.

சென்னையில் பயங்கர மழை. ஊரெல்லாம் வெள்ளம். அம்மாசி என்பவர் சென்னையின் சேரிப் பகுதியைச் சேர்ந்த கிழவர். திருமணமாகாதவர். பாப்பாத்தி என்ற பெண் பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து தீனன் என்ற ரிக்ஷாக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், தீனன் - பாப்பாத்தியால் முதலிரவு கொண்டாட முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். அகமொன்று. புறமொன்று.

புறக்காரணம் – அன்றைய இரவு திடீரென்று சூறைக்காற்று. அதைத் தொடர்ந்து பெருமழை. சேரியின் குடிசைகள் சின்னாபின்னமாகின்றன. எல்லோரும் கிடைத்த இடங்களில் – வீடுகளில், பள்ளிகளில் தஞ்சம் புகுகின்றனர். தீனன் பாப்பாத்தியை செல்வம் என்பவனுடைய வீட்டில் விட்டு விட்டு மக்களுக்கு உதவ சென்று விடுகிறான். சேரிப் பகுதியே தத்தளிக்கிறது.

இரண்டு நாட்களாகியும் மழை நின்றபாடில்லை.  எங்கும் செல்ல முடியவில்லை. மாடி வீடுகளில் தங்கிய சேரி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். உணவில்லாமல் தவிக்கின்றனர். அப்போது ஒரு லாரி வருகிறது. அதில் உணவுப் பொட்டலங்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் வண்டி. வரிசையில் நின்று வாங்கிகொள்ள வேண்டும் என்று சொன்னபோதும் மக்கள் முண்டியடிக்கின்றனர். பொட்டலங்களை வரிசைக் கிரமமாக விநியோகிக்கின்றனர். அப்போது ஒருவன் ‘நாளைக்கு வேற ஒருத்தன் வந்து உங்களுக்கு பொட்டலம் கொடுப்பான். வாங்காதீங்க. நாங்களே நாளைக்கும் வருவோம். சரியா’ என்கிறான். மக்கள் இருந்த நிலைக்கு கிடைத்தால் போதும் என்றிருந்தனர். அம்மாசி கிழவர் மட்டும் வாங்கிக்கொள்ளவில்லை எதையும். சாப்பிடாமலேயே இருந்தார். அருகிலிருந்தவர்கள் வற்புறுத்தியும் அவர் எதையும் சாப்பிடவில்லை. அரசுப் பள்ளிகளில் கொட்டும் மழையில் இருந்தனர். இப்படியாக சென்னையின் சேரிப் பகுதி அந்த பெரு வெள்ளத்தை எப்படி எதிர்கொண்டது? மக்கள் என்ன செய்தார்கள்? மீண்டார்களா? அரசியல்வாதிகள் என்னென்ன நாடகங்கள் நடத்தினர்? என்று பல கேள்விகள்.

இதுவரை நான் சொன்னது கடந்த ஆண்டு பெய்த மழையைப் பற்றி அல்ல. ‘பிரளயம்’ என்ற ஜெயகாந்தனின் குறுநாவலின் ஒரு பகுதி. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இப்போது நடக்கும் அரசியல் கூத்துகளையும் மக்களின் அவலங்களையும் எப்படி அச்சுப் பிசகாமல் மனிதர் அன்றே எழுதியிருக்கிறார் என்று வியப்பு. இதை அவர் எழுதியது 1964இல்.

ஜெயகாந்தன்

எப்படி இன்றும் இக்கதை பொருந்துகிறது? இதை ஜெயகாந்தனின் தீர்க்கதரிசனம் என்று சொல்வதா? அல்லது அவர் எழுதிய காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தின் நிலை இதுவென்று கொள்வதா? மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் சேரிப் பகுதிகள் அப்போது போலவே இப்போதும் உள்ளன என்பது புரிகிறது. இந்த முறை இதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கும் ஊடக வெளிச்சம் பாய்ச்சியதற்கும் காரணம் இந்த முறை சேரிப் பகுதிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த சென்னையே பாதிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு எதுவுமே தலைநகரத்தில் (அதுவும் நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கு) நடந்தால்தான் காது கொடுத்துக் கேட்போம்; கண் கொண்டு பார்ப்போம். அதுவும் நடுத்தர, மேற்தட்டு மக்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டதால்தான் இவ்வளவு முக்கியத்துவம். சேரி மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெறும் செய்தியாக மட்டும் ஒற்றை வரியில் சொல்லிச் சென்றிருப்பார்கள். நாமும் வாசித்து ‘லைக்’ செய்து கடந்திருப்போம்.

இப்போது அகக் காரணத்துக்குள் நுழைவோம். அம்மாசியின் மகள் பாப்பாத்தி செல்வம் என்பவனுடைய வீட்டில் அவ்வப்போது சென்று வீட்டு வேலை செய்து வந்தாள். செல்வம் நிறைய படித்தவன். அமைதியானவன். திருமணம் செய்துகொள்ள விரும்பாதவன். அந்த இளைஞனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்தது. ‘திருமணம் செய்துகொள்’ என்று அவள் கேட்டாள். அவன் மறுத்தான். அதற்கு அவன் பெரிய விளக்கம் கொடுத்தான். அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவனை நம்பினாள். அவன் நிறையப் படித்தவன் அவனுக்குத் தெரியாதா என்று. அவன் சொல்லித்தான் அவள் தீனனைத் திருமணம் செய்துகொண்டாள். செல்வத்துக்கு இதில் பரம திருப்தி. மழை காரணமாக அவள் வீட்டில் தஞ்சமடைந்தபோது அவன் அவளிடம் உறவுகொள்ள நினைத்தான். அவள் அதை விரும்பவில்லை. அவளுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு. தன்னை முழுதாக நம்பும் தீனனை ஏமாற்றுகிறோமோ என்று. காரணம், முதலிரவு அன்று தீனன் பேசியது அவன் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதைக் காட்டியது. அதனால் அவள் செல்வத்திடம் நெருங்காமல் தயங்கினாள். அது செல்வத்தை மிகவும் எரிச்சலூட்டுகிறது.

செல்வம் பாப்பாத்தியிடம் சொல்லியிருந்தான் “நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சில நாட்களிலேயே கசந்து விடும். எனவே, நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள். எப்போதும் போல் இங்கு வீட்டு வேலைக்கு வா. நாம் பழைய மாதிரியே சந்தோசமாக வாழலாம். ஒரே வீட்டில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் கொஞ்ச நாளில் அது கசந்து விடும்” என்று. எல்லாம் முன்பே பேசித்தானே நடந்தது? இப்போது இவள் தாலியைக் காட்டி தள்ளிப் போகிறாளே என்று. அவன் பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுகிறான். கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறான்.

இக்கருத்தை வாசித்தபோது போது நான் அதிர்ந்து போனேன். ஜெ.கே வின் பல கதைகளில் இதுபோன்ற அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கதையில் வரும் செல்வம் போலவே நிஜ வாழ்வில் ஓர் எழுத்தாளர் செய்திருக்கிறார். அவர்தான் ஆண்டன் செகாவ்.
ஆண்டன் செகாவ்

செகாவ் ரஷ்யாவின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். அவரும் காதலித்தார், தன்னுடைய நாடகங்களில் நடித்து வந்த ஒல்கா நிப்பர் என்ற நடிகையை. திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஒரு நிபந்தனையோடு. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது. அவர் ஒரு வீட்டிலும் இவர் ஒரு வீட்டிலுமாக வசிக்க வேண்டும். அதுவும் வெவ்வேறு ஊர்களில். ஏனாம்? அவருடைய காரணமும் ஜே.கே வின் கதாபாத்திரம் செல்வம் சொல்லும் அதே காரணம் தான். “நிறைய விட்டுகொடுக்க வேண்டும், சமரசம் செய்ய வேண்டும். அது தேவையற்றது. சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்றால் தனியே வாழ்வதே சிறப்பானது.” திருமணத்துக்குப் பிறகு ஒல்கா மாஸ்கோவிலும் செகாவ் யால்டாவிலும் இருந்து கொண்டே வாழ்ந்தனர். 

மனைவி ஓல்காவுடன் செகாவ்

செகாவின் வாழ்க்கையை ஜெ.கே அறிந்து அதன் பாதிப்பில்தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினாரா? தெரியவில்லை.

இந்தக் கதையில் ஜெ.கேவின் சாதனைகள் என்று எதைச் சொல்வது? அவருடைய மொழி நடையையா? அல்லது அடித்தட்டு மக்களுடைய ஆதாரப் பிரச்னையையும் மேல்தட்டு மக்களின் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒரே கதையில் ஒன்றாக இணைத்து இழைத்திருக்கும் மேதமையையா? வெள்ள காட்சிகளின் வருணனைகளையா? உப கதாபாத்திரங்களின் கதைகளையா?

இக்கதையில் அவர் எழுதிய சில மகத்தான வரிகளோடு முடித்துக்கொள்கிறேன்.

“ஒரு மனிதனின் ஆத்மாவையே ஒரு கவளம் சோற்றை விலையாகக் கொடுத்து வாங்கிவிட முடியும்.”

“நமக்கெல்லாம் ஊடு கெடச்சா சோறு கெடைக்காது. ஊடு இல்லேன்றப்ப பொட்டலம் கெடைக்கும்.”

“தருமம் செஞ்சா குடுத்தப்பறம் மொகம் சுருங்கக் கூடாது.”

“சமூக வாழ்க்கையின் பொதுத் தன்மையும் ஒவ்வொரு மனிதனின் தனித் தன்மையும் மாறாதிருக்கும் வரை, வெறும் இடங்களை மாற்றிச் செல்வதால் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதில்லை.”

“ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய் பிறக்கும். கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்?”

ஜெ.கே. இப்போதும் கர்ஜித்துக்கொண்டுதான் இருக்கிறார்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்