முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவரின் உழவியல் பார்வை - முன்னுரை

இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலேயே அதிக முறை ஆய்வு செய்யப்பட்ட இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும். இரண்டு கிலோ ஆண்டுகளாக ஓர் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அது குறள் மட்டுமே. குறளின் சிறப்பை குறள் போல் இரண்டு அடியில் சுருக்கி விட முடியாது. நான் உலகத் திருக்குறள் மையத்திலே உறுப்பினராக இருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்கிறேன். இரண்டு முறை குறள் பற்றிச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறேன். 

பல நாட்களாகவே எனக்கு ஒரு வருத்தம் உண்டு. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே வயதானவர்கள் (என்னைத் தவிர). ஆம். மற்ற அனைவருமே நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். பலர் அறுபது வயது காரர்கள். இளைஞர்கள் இல்லா குறளரங்கம் ஒரு வித சலிப்பையே எனக்கு ஏற்படுத்தியது. முடிந்த வரையில் என் நண்பர்களை "கட்டாயப்படுத்தி" அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனாலும், அவர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. காரணம், கூட்டங்களில் ஒரு சிறப்பு அழைப்பாளர் வந்து ஏதேனும் ஒரு தலைப்பில் நீண்ட உரையாற்றுவார். அதற்கு முன்னதாக, மைய உறுப்பினர்கள் பல நிமிடங்கள் குறள் சொல்லி, சில சமயம் தொடர்பே இல்லாத கதைகள் சொல்லி, சிலர் திருவாசகம், திருவருட்பா, பாரதி பாடல்களை ஒப்பித்துக் கூட்டத்தின் நோக்கத்தையே மாற்றுவர். சிறப்பு அழைப்பாளரின் பேச்சு கூடப் பழைய குறளை பழைய பார்வையிலேயே நோக்குவதாகவே இருக்கும். இதனால், குறள் இன்றைய தலைமுறைக்குச் சலிப்பைத் தருவதாக ஆகி விடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், குறளை நாம் ஒரு நீதி நூல் என்றே சொல்லி சொல்லிப் பழகி விட்டோம். அதனால், அதிலுள்ள அருமையான கவிதைகளை நம்மால் ரசிக்க முடியவில்லை. இந்த அணுகுமுறை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் ஆழமாக விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நீதிக் குறள்களை அதிகமும் போதனை போன்று சொல்லி வேதனைப் படுத்துவதை விட ரசிக்கும்படியாக உள்ள கவிதைக் குறள்களைச் சொன்னால் குறள் மீது ஓர் ஈர்ப்பு வரும். பிற்பாடு, நீதி சொல்லலாம். அப்போது அது எடுபடும். இது குறளை மாற்று முறையில் அணுக வேண்டிய நேரம், அணுகி மாற்று முறையில் அதை அடுத்தத் தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டிய நேரம். நிற்க, விட்டால், நான் குறள் பற்றி எழுதிக்கொண்டேயிருப்பேன். வள்ளலார் சொன்னது போல, 'இது விரிக்கின் பெருகும் என்பதால் இத்துடன் விடுக்கிறேன்'` 


சென்ற ஆண்டு, தமிழ்நாட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட திருக்குறள் ஆய்வுக் கட்டுரை போட்டிக்கு நானும் ஓர் ஆய்வுக் கட்டுரை அனுப்பினேன். கொடுமை என்னவென்றால், இன்னும் அந்தப் போட்டியின் முடிவு வெளிவரவில்லை. தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது கட்டுரையைத் தேர்வு செய்யும் நடுவர் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதால், நாளாகும் என்றனர். நானும் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தேன். இன்னும் வந்தபாடில்லை. எனவே, நான் அவர்களுக்கு "வள்ளுவரின் உழவியல் பார்வை" என்ற தலைப்பில் அனுப்பிய கட்டுரையை இங்கே  வெளியிடுகிறேன். நவீன விவசாயத் தொழில்நுட்பம் பற்றி வள்ளுவர் கொண்ட பார்வையை விளக்கும் கட்டுரை. அது 15 பக்கக் கட்டுரை. உங்கள் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியிடுகிறேன் . படித்துப் பாருங்கள். நன்றி!!! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...