எனக்கு இரண்டு முறை
பேய் பிடித்திருக்கிறது. என்னடா இது, கடவுள் மீதும் பேய் மீதும் நம்பிக்கை
இல்லாதவனுக்கா என்று நண்பர்கள் ஆச்சர்யப்படக்கூடும். உண்மைதான். அந்தப் பேய்
பிடித்த அனுபவத்தைதான் சொல்லப் போகிறேன்.
கல்லூரியின்
மூன்றாம் ஆண்டில் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது முதல்முறை பேய் பிடித்தது.
இரண்டாம் முறைதான் மறக்கவே முடியாதது.
அது நான் வீட்டில்
இருந்தபோது வந்தது. அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டுப் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசிச் செமஸ்டர். ப்ராஜக்ட் வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தன. இன்னும் மூன்று நாள்களுக்குள்
முழுதும் முடித்துச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை. இரவு பகல் பாராமல் இறுதி
வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருந்தோம். (கடைசி நேரம் என்பதால்தான் இந்த இரவு
பகல் பாராத உழைப்பு). மெய்யாகச் சொல்கிறேன். அந்த மூன்று நாள் நான் இம்மி கூடத்
தூங்கவில்லை. கண்ணை மூடிப் படுத்தால் அடித்துப் போட்டது போல் தூங்க நேரிடும் என்ற
பயத்தில் தூக்கம் வரும்போதெல்லாம் நடந்துகொண்டே பாட்டுக் கேட்பேன். பாடவும்
செய்வேன். ப்ராஜக்ட் ரிவீவ் முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கியபோது மணி இரவு
ஒன்றாகியிருந்தது. அப்போதுதான் இரண்டாம் முறை பேய் பிடித்தது.
மூளை கொஞ்சம்
கொஞ்சமாகக் கரைவது போல் இருந்தது. அப்படியே நீர் போல் வழியத் தொடங்கியது. என்
நெஞ்சின் மீது பேய் வந்து அமர்ந்து கொண்டது. என்னைப் பிடித்து அமுக்கியது. நான்
தள்ளிவிட முயன்றேன். அது பேய்ய்ய்.. நானோ அற்ப மனிதன். அதனால் அது என்னை மேலும்
ஆக்கிரமித்துக்கொண்டது.
என்னால் நகர
முடியவில்லை. கையையோ காலையோ அசைக்க முடியவில்லை. அந்தப் பேய் எப்படி இருக்கிறது
என்று பார்க்க கண்ணைத் திறக்க முயன்றேன். பலனில்லை. குறைந்தபட்சம் கத்தினாலாவது
யாராவது உதவ வருவார்கள் என்று கத்துகிறேன். “பாட்டி பாட்டி” என்று தொண்டை கிழியக்
கத்துகிறேன். என்ன ஆச்சர்யம்!! நான் கத்துவது எனக்கு மட்டும்தான் கேட்கிறது.
வெளியில் “ஊ ஊ” என்றுதான் ஒலி வருகிறது. என்னால் இரண்டு ஒலிகளையும் தெளிவாகக்
கேட்க முடிகிறது என்பது நம்பமுடியாததாக இருந்தது. மூச்சுக் காற்றைக் கொஞ்சம் பலமாக
விட்டாலே விழித்துக்கொள்ளும் என் பாட்டி அன்று ஏனோ இத்தனை சத்தத்தையும் காதில்
வாங்கிக் கொள்ளவே இல்லை. ‘இன்று நான் செத்தே விடுவேன்’ என்று உள்ளுக்குள்
தோன்றியது. இருந்தாலும் முயற்சியை விடவில்லை. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்’ அல்லவா? என் முழு ஆற்றலையும் பிரயோகித்தேன். கூலி தந்தது.
எழுந்து உட்கார்ந்துகொண்டேன். அந்தப் பேயைத் தேடினேன். எங்கோ ஓடிவிட்டது. பின்னர்
மீண்டும் படுத்தேன். அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் மூளை கரையத் தொடங்கியது.
ம்ஹூம்... இது சரிப்பட்டு வராது என்று கீழே இறங்கி சகோதரன் அருகில் படுத்துக்கொண்டேன்.
மீண்டும் பேய் பிடித்தால் அவன் காப்பாற்றுவான் என்றொரு நம்பிக்கை.
அந்த அனுபவத்தை
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மனதில் ஆழமாகப் பதியவிட்டுக்கொண்டேன்.
அன்றிரவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அது இன்றுதான்
நிறைவேறியுள்ளது.
இப்போது
உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் பேய் பிடித்ததாகச் சொன்னது ‘Sleep Paralysis’
என்று அறியப்படும் தூக்க பக்கவாதம் என்று. இதுதான் இக்கட்டுரையின் மையம்.
தூக்க பக்கவாதம்
என்பது எல்லோர் வாழ்விலும் ஒரே ஒரு முறையாவது வந்து விடும். இதை ஆங்கிலத்தில்
‘Nightmare’ என்பார்கள். நம்மூர்களில் இதை அமுக்குவான் பேய் என்பார்கள். கிரைண்டர்
கல் ஒன்று நெஞ்சின் மீது உட்கார்ந்து அமுக்குவது போல் இருப்பதால் இதை அமுக்குவான்
பேய் என்றனர் நம் முன்னோர்.
இதில் ஒரே ஒருமுறை
வருவது, அடிக்கடி வருவது என்று இரண்டு வகை இருக்கிறது.. அடிக்கடி இதுபோல் வருவது
அரிது. முதல் வகைதான் பரவலானது. இது கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும்
இடைப்பட்ட நிலை. (An intermediate state between conscious and dreamy states).
இது வருவதற்குச்
சில காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது சரியான நேரத்தில் தூங்கி சரியான
நேரத்தில் விழிக்காதது. நம் உடலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சுரக்கும் சில
ஹார்மோன்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று மெலடோனின். (மெலனின் அல்ல. மெலனின் என்பது தோல்
நிறமி. இது மெலடோனின்). இது இரவில்தான் சுரக்கும். அதுவும் நாம் தூங்கினால் மட்டுமே.
இந்த மெலடோனின் சுரப்புச் சரியாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. இதன் சமநிலை
மாறும்போதுதான் தூக்கப் பிரச்சினைகள் தொடங்குகின்றன.
நிச்சயமாகத்
தூ.ப.வாதம் வரும்போது நம் காதலன்/காதலியுடன் இருக்கும் மாதிரியான கனவுகள் நமக்கு
வராது. அமானுஷ்யமான, பயங்கரமான, திகிலூட்டும் கனவுகள்தான் வரும். அதனால்தான் நாம்
இதைப் பேய் என்று முடிவு செய்து விட்டோம்.
குப்புறப்
படுத்தால் இது அதிகம் வருவதில்லை என்கிறார்கள். நேராகப் படுக்கும்போதுதான் இதற்கான
வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதற்குப் பெரிதாக மருந்து, மாத்திரைகள் எதுவும்
கிடையாது. (மெலடோனின் மாத்திரைகள் கிடைக்கின்றன) தேவையும் படாது. பெரிய
விளைவுகளையும் ஏற்படுத்தாது. அடிக்கடி வந்தால்தான் சிக்கல்.
உலகின் பெரும்பாலான
இலக்கியங்களில் இதைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ
அண்ட் ஜூலியட்’- இல் கூட இதைப் பற்றிய குறிப்பு வருகிறது. தமிழில் நாட்டார்
கதைகளிலும் உண்டு. அனைத்துக் குழு மக்களிடமும் வெவ்வேறு பெயர்களில் இது
உலாவுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து குடி மக்களும் இதைப்
பேயாகவே உருவகப் படுத்தியுள்ளனர். வெகு சில இனங்களில் மட்டுமே, இப்படிச் செய்வது ஏலியன்கள்
என்று நம்புகிறார்கள்.
மனிதனின் அடிப்படை
தேவைகள் மூன்று - உணவு, உடை, உறைவிடம். என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் நான்காவதாகக்
காமத்தையும் சேர்த்துக்கொள்வார். நான் ஐந்தாவதாகத் தூக்கத்தையும் சேர்த்துக்கொள்ள
விரும்புகிறேன்.
ஆம். தூக்கம்
என்பதே இன்று பலருக்குத் துக்கத்தைத் தருகிறது.
நேரத்துக்குத்
தூக்கம் வரப்பெற்றவன் உண்மையிலேயே வரம் பெற்றவன் என்றுதான் பொருள். குழந்தைகள் ஒரு
நாளைக்கு இருபது மணி நேரம் தூங்க வேண்டும். வயதானவர்களுக்கோ அவ்வளவு சீக்கிரம்
தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் ஒழுங்கான தூக்கத்தைப் பெறமுடியாது. மணிக்கு
முந்நூறு தடவை விழிப்பு வந்துவிடும். இளைஞர்கள் இந்த இரண்டுக்கும் இடையில்
இருக்கின்றனர். இன்று வயதானவர்களை விடவும் இளைஞர்களுக்குத் தூக்கப் பிரச்சினை
தூக்கலாகவே இருக்கிறது. காரணம், அவர்கள் விர்ட்சுவல் உலகத்திலேயே வாழ்வதால் தான்.
கண்ணை மூடினால் கலர் கலராக வருகிறதே தவிரத் தூக்கம் வந்து தொலைக்க மாட்டேன்
என்கிறது. தொழில்நுட்பத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம் உடலுக்கும் தட்ப
வெட்பத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இறக்குமதியாகும் உணவுகளை உண்பது, பணிச் சுமை,
காரணமே இல்லாமல் ஏற்படும் கோபம், மன அழுத்தம் – இவையும் கூடப் பெரும்
காரணமாகின்றன.
கடந்த எட்டு
ஆண்டுகளாக எனக்கு இரவில் படுப்பதற்கு அதிகாலை நான்கு அல்லது ஐந்து ஆகிவிடுகிறது.
இன்றும் இதே கதைதான். நானும் 'தூக்கமின்மையைச் சரி செய்வது எப்படி?' என்றெல்லாம்
புத்தகம் படித்து விட்டேன். பயனில்லை.
சில பேருக்குப்
புத்தகத்தைத் திறந்தாலே தூக்கம் வந்துவிடும். அந்தப் பாக்கியமும் எனக்குக்
கிடையாது. புத்தகத்தைத் திறந்தால் மூளை சுறுசுறுப்பாய் ஆகிவிடுகிறது. ஒரு
மருத்துவர் ஒரு மாதத்துக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி தூக்க மாத்திரையைத்
தைரியமாகப் பரிந்துரைத்தார். நானும் முயன்று பார்த்தேன். அந்த நிலையெல்லாம் தாண்டி
நான் வந்துவிட்டேன் என்பது புரிந்தது. மேலும், மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது
எனக்குப் பயமாக இருந்தது. விட்டு விட்டேன்.
இந்த மாதிரி
உங்களுக்கும் பேய் பிடித்திருக்கக்கூடும். இதுவரை இல்லையென்றால் இனிமேல்
பிடிக்கும். பயப்படாதீர்கள். விழிப்போடு இருங்கள். அதாவது நன்றாகத் தூங்குங்கள்.
உபரித் தகவல்:
‘தூக்கம்’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலாகத் திருவள்ளுவர்தான்
பயன்படுத்துகிறார். ஆனால், இன்று நாம் பயன்படுத்தும் உறக்கம் என்ற பொருளில் அல்ல.
0 கருத்துகள்