வடமொழியால் பட்ட பாடு போதும் என்ற மன நிலையில் இருந்த தமிழர்களுக்கு அடுத்த தலைவலியாய் வந்து சேர்ந்தது இந்தித் திணிப்பு. இந்தியை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கிய நேரு பலத்த கண்டனத்துக்கு உள்ளானார். திராவிட இயக்கங்களும் மாணவர்களும் தமிழக மக்களும் வீதியில் இறங்கி தங்கள் மொழிக்காகப் போராடியது இந்தியை கட்டாயத்திலிருந்து விருப்பத்துக்கு கொண்டு சென்றது. அந்த 1960களிலிருந்து இந்தியை ஊடுருவ விடாமல் இரும்புத்திரைப் போட்டு பாதுகாத்து வருகின்றனர். எனினும், அமைதியாக மக்கள் இந்தியின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளனர் என்பதும் உண்மை. அதன் வெளிப்பாட்டை இரண்டு வாரங்களுக்கு முன்னால் (ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்) தஞ்சை உமா மகேஸ்வரனார் கல்லூரியில் கண்டேன். .
தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா என்ற அமைப்பு தென் இந்திய மக்கள் இந்தி கற்க அருமையான பாடத் திட்டதோடு எட்டு தேர்வு நிலைகளில் இந்தியைக் கற்றுத் தருகின்றனர். இந்த அமைப்பு 1918 - ஆம் ஆண்டு காந்திஜியால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கினாலும் இந்த அமைப்பின் நோக்கம் சமீப காலமாகத்தான் சொல்லிக்கொள்ளும்படி நிறைவேறியுள்ளது. இப்போது எழுதிய தேர்வு ஐந்தாவது நிலை. 'விஷாரத் பூர்வார்த'. இன்னும் மூன்று தேர்வுகள் முடித்தால் B.A (Hindi) என்று போட்டுக்கொள்ளலாம்.
செமஸ்டர் தேர்வுக்கு முதல் நாள் ஓர் இரவு மட்டும் படித்தே பழகிவிட்டதால் இந்தத் தேர்வுக்கும் அதையே செய்தேன். தேர்வு நாளன்று திருவிழா போன்ற கூட்டத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன். பிராத்தமிக் தேர்வுக்கு இந்த கூட்டம் இருந்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அது முதல் நிலை. ஆனால், ஐந்தாம் நிலைத் தேர்வைக் கூட இவ்வளவு பேர் எழுதுவது வியப்புதான். இந்தியின் மீது ஆர்வம். 2000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள், வகை வகை வாகனங்கள், பரபரப்பு, படபடப்பு, அறை எண்ணை கண்டுபிடிக்கக் காட்டிய அவசரம் எல்லாம் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.
ஆனால், பெற்றோர்கள் அக்கரைப்படுவதாக கொஞ்சம் அதிகமாகவே மற்றவர்களுக்கும் இடையூறு செய்தனர்.
பத்து மணிக்கு தேர்வு தொடங்கிய பிறகும் அறைக்கு வெளியே நின்றுகொண்டு உள்ளே இருக்கும் தங்கள் பிள்ளைகளுடன் சத்தமாகப் பேசினர். அங்கிருந்து நகரச் சொன்ன ஆசிரியருக்கும் பெற்றொருக்கும் வாக்குவாதம் நடந்தது. தேர்வு முடியுமுன்பே அறைக்கு வெளியே வந்து நின்று "எல்லாக் கேள்வியும் எழுதிருக்கியா? ஈசியா இருக்கா? ஜெனரல் எஸ்ஸே என்ன கேட்டிருக்கான்?" என்று வெளிவந்த பின்பு கேட்க வேண்டியதை முன்னமே கேட்டது என்னைப் போல் தேர்வு எழுதிய மற்றவர்களையும் எரிச்சலாக்கியது.
பெற்றோர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வியின் மேல் அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்வது மகிழ்ச்சியானது என்றாலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் நடந்துகொள்வது சரியல்ல. இவர்களில் படித்த, நல்ல பணியில் இருப்பவர்கள்தான் அதிகம் என்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியது. ஆங்கிலத்தில் 'etiqutte' என்றொரு சொல் உள்ளது. தமிழில் இங்கிதம் என்பர். அந்த இங்கிதம் தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். எல்லோரும் கத்துவதால் எளிமையாக கண்டுபிடிக்கக்கூடிய அறைகளைக் கூட சிரமப்பட்டு கண்டறிகிறார்கள். பிரச்சார சபாவும் மாணவர்கள் எளிதாக தங்கள் அறையைக் கண்டுபிடிக்கவும் அங்கே செல்ல வழி காட்டவும் தனியே சில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் சிரத்தைக் காட்டினால் இந்தத் தேர்வுகளை இன்னும் சிறப்பாக நடத்தலாம்.
இந்தி இந்தியாவின் ஒரு மொழி என்ற அளவில் அதை கற்றுக்கொள்வது தவறில்லை. மொழிப் பயிற்சி என்பது அறிவு சார்ந்ததல்ல. அது திறன் (Skill) சார்ந்தது. எந்த மொழி கற்றாலும் தன் தாய் மொழியை நேசித்து அதையே தன் நாட்டில் பேசி, பயன்படுத்தி தேவைப்படும்போது மட்டும் மற்ற மொழிகளைப் பயன்படுத்தினால் திணிப்பு என்ற ஒன்று வராது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்பதெல்லாம் இன்றைய உலகத்தில் நடக்காத விஷயம். எனவே, எல்லா மொழிகளையும் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வதுதான் நாம் அறிவில் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறி. அந்தப் பக்குவம் வர முயற்சி எடுப்போம்.
சரி....தலைப்பில் இருமல் என்று சொல்லியிருந்தேனே?? அது என்ன என்று யோசிக்கிறீர்களா? இந்தத் தேர்வில் பெற்றோர்களோ ஆசிரியர்களோ செய்ததை விட எனக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்தது என்னுடைய இருமல். அமைதியாக இருந்த தேர்வறையில் சளியை அடித் தொண்டை
யிலிருந்து மேலெழுப்பும் முயற்சியாய் நான் இருமிய இடைவிடாத இருமல் தான் எனக்கும் மற்றவர்களுக்கும் பெரும் தொந்தரவாக இருந்தது.
2 கருத்துகள்