முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறக்கட்டும் புதுயுகம்!!!


இந்தக் கட்டுரை ....
                                  
          LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை நான் படித்த பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு மலருக்காக (25ஆம் ஆண்டு)  நான் எழுதியக் கட்டுரை.       


                   வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே ஏராளம் உண்டு. புத்தகங்களைப் பற்றிய வரலாறும் உண்டு. புத்தகங்களின் மேற்பார்வையில் தான் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி நடைபெற்று வந்துள்ளது.  

                    சீனாவிலிருந்து இந்தியா வந்தவர் யுவான் சுவாங்.  நாளந்தா பல்கலைகழகத்தில் மாணவராகச் சேர்ந்து பல நூல் பயின்று, சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஒரு நாள் தன் தாயகம் திரும்பி புத்தமத பிரச்சாரம் செய்யும் உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. புறப்பட்டார். அப்போது தம்முடன் அற நூல்கள் பலவற்றை எடுத்துச் சென்றார். அவரை வழியனுப்ப மாணவர் பலரும் உடன் சென்றனர். கழகத்திலிருந்து கப்பலுக்கு படகு மூலமாகத்தான் செல்ல முடியும். அப்படியே சென்றனர்.  படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று புயல் வீசியது. நிலை குலைந்தனர் படகில் இருந்தவர்கள். படகு கவிழ்ந்துவிடுமோ என்று அனைவருமே அஞ்சினர். யுவான் தாம் கற்றவை, கொண்டு செல்ல நினைத்தவை அனைத்தும் நதிக்கே இரையாகிவிடுமோ என்று முகம் வாடினார். அது கண்ட மாணவர்கள் உடனே அச்செயலைச் செய்தனர். ஆம். பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என்றெண்ணி ஆற்றில் குதித்து விட்டனர். ஆறு அவர்களை உள் வாங்கி ஏப்பம் விட்டது.  படகு தப்பியது. அறிவுச் செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதை உணர்த்திய இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் தன் புத்தகங்களோடு யுவான்  சுமந்து சென்றார்.

                   பொதுவாக அரசர்கள் போர்க்களத்துக்கு செல்லும்போது, சில சமயம் பல்லக்கில் அரசியை அழைத்துச் செல்வர். ஷாஜஹானோடு போர்க்களத்துக்கு மும்தாஜும் சென்றதாகச் சொல்வர். மும்தாஜ் மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.  ஆனால், மாவீரன் நெப்போலியன் எங்கு படை எடுக்கச் சென்றாலும் தன்னுடன் பல்லக்கில் ஒரு நடமாடும் நூலகத்தையே கொண்டு செல்வானாம். அதில் 5000 புத்தகங்கள் இருந்தனவாம். புத்தகங்கள் மீது இவனுக்கு இப்படி ஒரு காதல். ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிப்பதற்காக தனக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையையே ஒரு நாள் தள்ளிப் போட்டவர் பேரறிஞர் அண்ணா. ஜனாதிபதி பதவியை முடித்து ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறிய டாக்டர். அப்துல் கலாமிடம் இருந்தது இரண்டு சூட்கேஸுகள்தான். ஒன்றில் அவருடைய துணிகள். இன்னொன்றில் அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள். கியூப நாட்டின் அதிபராக ஃபிடல் கேஸ்ட்ரோ இருந்தபோது சிறந்த புத்தகங்களை அந்நாட்டின் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கச் செய்தார். நாம் போற்றும் எல்லா சரித்திர நாயகர்களும் இப்படி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களுடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
           
                   சில புத்தகங்கள் குழந்தையைப் போல் அனுமதியின்றி நம் மேல் ஏறிக்கொள்ளும். சிலவோ, ஒரு தோழன் போல நம் தோள் மேல் கை போட்டு உடன் வரும். இன்னும் சில ஓர் ஆசிரியரைப் போல் கண்டிப்புடன் நமக்கு கட்டளையிடும். புத்தகம் மட்டும்தான் நம் தவறுகளை அடுத்தவர் அறியாமல் சுட்டிக்காட்டும்.  ஓர் அருமையான சொலவடை: "நமக்கு எவ்வளவுதான் தெரிந்திருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும், எல்லாம் இருந்தும் அமைதியாக இருக்கும் நூலகம் போல." இப்படி இன்னும் எத்தனையோ நல்ல பண்புகள் உள்ளன புத்தகத்திடமிருந்து கற்றுக்கொள்ள.

                   அப்துல் கலாம் சொல்கிறார், "நம்மால் நம் எதிர் காலத்தை நேரடியாக மாற்ற முடியாது. ஆனால், நம் பண்புகளை மாற்றிக்கொள்ள முடியும். அந்த பண்புகள் மூலம் நம் எதிர்காலம் மாறும்" என்று. நல்ல புத்தகங்கள் நல்ல பண்புகளை வளர்க்க உதவுகின்றன. மாணவப் பருவம் வாழ்வின் முக்கியப் பருவம்.  மாணவர்கள் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்மதிப்பெண்கள் பெற பாடப் புத்தகங்களையும் சமுதாயத்தில் மதிப்பு பெற பொது நூல்களையும் படிக்க வேண்டும். கலாம் மேலும் சொல்கிறார் "நாள்தோறும் ஒரு மணி நேரம் பொது நூல்களைப் படித்தால் ஓராண்டில் நாம் ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்குவோம்" என்று.

              2750 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியாவின் அசிரியப் பேரரசின்   கடைசி மன்னரான அசுர்பானிபல் மகத்தான காரியம் ஒன்றை செய்து விட்டுப் போனார். 30,000 களிமண் தகடுகளில் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பதியப்பட்டன. அவற்றைத் துறை வாரியாகப் பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார்'The Royal Library Of Ashurbanipal' என்று பெயரிடப்பட்ட இதுவே உலகின் முதல் நூலகம். பின்னர் எகிப்திய மன்னரான டாலமி (மாவீரன் அலெக்ஸாண்டரின் நண்பர்) காலத்தில் ஏழு லட்சம் பாப்பிரஸ் தாள்களைக் கொண்ட மாபெரும் நூலகம் அலெக்ஸாண்ட்ரியா நகரில்             'The Royal Library of Alexandria' என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தற்போது நல்ல, விதவிதமானத் தாள்களில் அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இதையும் தாண்டி இன்று புத்தகங்கள் மின்னனு பரிமாணத்தில் பரிணாமம் அடைந்துள்ளன. இவற்றை e-books என்கின்றனர். 1993லேயே மின் புத்தகங்களைப் படிப்பதற்கென்றே பிரத்யேகமான மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டன. இன்று எல்லாம் கணினி மயமாகிவிட்டன. தாள்களின் தேவை குறைந்துவிட்டது. (நானும் கூட இக்கட்டுரையை தாளில் எழுதவில்லை. நேரடியாகவே கணினியில் தட்டச்சு செய்கிறேன்). களிமண் தகடுகளில் தொடங்கிய புத்தகத்தின் பயணம் சிலிக்கான் சில்லு வரை வளர்ந்து விட்டது

                புத்தகம் என்பது வெறும் காகிதம் அல்ல. நூலகத்தின் ஏதோவொரு மூலையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் ஏதோவொரு புத்தகம் யுகப்புரட்சியையே ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது. இரண்டு புரோட்டான்கள் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவை விட ஒரு புத்தகமும் மனிதனும் இணையும்போது உண்டாகும் ஆற்றலின் அளவே பெரிது என்று கருதுகிறேன்இந்த உலகையே ஒரு புத்தகத்தால் நல்வழிப்படுத்த முடியும் என்று நம்பியதால்தான் இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் 'திருக்குறள்' என்ற அரிய நூலை வடித்துத் தந்துள்ளார்

                    இன்று நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி, நாம் புத்தகத்தின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா என்பதுதான். இலக்கணப்படி புத்தகம் என்பது காரணப்பெயர். புது + அகம் = புத்தகம். அகத்தை சுத்தம் செய்து புதிதாக்குவதுதான் அதன் பணி. புத்தகம் தன் பணியைச் செய்ய என்றுமே தயங்கியதில்லை. அது தயாராகவே உள்ளது. நாம் தான் அவற்றை வாசிக்க யோசிக்கிறோம். இன்று இது வெறும் சொல்லாகவே உள்ளதுஇதன் பொருள் என்றைக்கு நம்மால் முழுமையடகிறதோ அன்று புது அகம் மட்டுமல்ல, புது யுகமும் பிறக்கும்.


                தீனதயாளன். மு
                'பட்டுக்கோட்டை அழகிரி' வளர்த்தெடுத்த பிள்ளை


கருத்துகள்

Tamilyuvapriyan இவ்வாறு கூறியுள்ளார்…
பொருள் அறிந்து படிப்பது மட்டும் அதன் நோக்கம் அல்ல, அதன் படி செயல் பட வேண்டும்...அருமையான கட்டுரை தான்... நூலகம் அமைதியாக இருக்க வேண்டுமே தவிர அதனை கற்றவர்கள் புயலாக இருக்க வேண்டும்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வள்ளுவரின் உழவியல் பார்வை - 1

முன்னுரை:   உலகின் மிகச் சிறந்த சிந்தனைவாதிகளுள் முதன்மையானவர் திருவள்ளுவர். அவருடைய சிந்தனையின் வீச்சு மாநிலம், நாடு, உலகத்தையே கூடக் கடந்து வான் வரை செல்லக்கூடியது. அதனால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று கர்வத்தில் மார் தட்டினான் மகாகவி பாரதி. இரண்டு கிலோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் இயற்றிய குறள் இன்றளவும் பொருந்துவதாய் இருப்பதற்குக் காரணம் அவருடைய விஞ்ஞான அணுகுமுறை. ஆம். வள்ளுவர் அடிப்படை ஆதாரங்களை மட்டுமே ஆராய்பவர். அவர் விலாவாரியாகப் பேசுபவர் அல்ல. இரண்டே வரிகளில் பேசுபவர். குறள் வாழ்வியல் நூல் தான் என்றாலும் விஞ்ஞானக் கருத்துகள் பலவற்றையும் தன்னுள் கொண்டுள்ளது. “உழவு” அதிகாரத்தில் அவர் கூறியிருக்கும் விவசாய முறைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஒத்துப் போகிறது என்பது வியப்பான செய்தி அல்ல. அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் எக்காலத்திற்கும் மாறாத கருத்துகளைச் சொல்லலாம் என்பதற்கு வள்ளுவர் சாலச் சிறந்த எடுத்துக்காட்டு. உழவு, உழவின் சிறப்பு, விவசாயப் பொருளாதாரம், செயல்முறைகள், உழவின் இன்றைய சிக்கல்கள், அதற்கு வள்ளுவர் கூறும்...

2026 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்கள்

கடைசியாக நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது 2022இல். இந்த ஆண்டோடு தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் செல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் சென்னையில் இருந்து யாராவது ஒருவர் கண்காட்சியில் இருப்பதாகச் சொல்லி புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்றா சொல்வேன்? ஒரு சிறு பட்டியலை அனுப்பி புத்தகங்களை வாங்கிவிடுவேன். இந்த ஆண்டும் என்னால் செல்ல முடியாது என்பது முன்பே தெரிந்துவிட்டது. அதனால் ஹரியைச் சென்று வரச் சொன்னேன். அவனால் இறுதி நாளன்றுதான் செல்ல முடிந்தது. சில மணி நேரமே இருந்ததால் கொஞ்சமே வாங்க முடிந்தது.  இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் பெரும்பாலானவை என்னுடைய “வாங்க வேண்டிய நூல்கள்” பட்டியலில் இருந்தவைதான். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நூல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. பரிசளிப்பதற்காக வாங்கினேன். அதேபோல் சிந்தா நதியும். இந்த முறை தொகுப்பு நூல்கள் 3 வாங்கியுள்ளேன். குறிப்பாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுத்தொகுப்பு (உத்தேசமாக 5000+ பக்கங்கள் கொண்டது). போலவே போரும் வாழ்வும் (3000 பக்கங்கள்). இந்த முறை தோராயமாக 10000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருப்பேன...

வள்ளுவரின் உழவியல் பார்வை - 2

வள்ளுவர் கூறும் விவசாய முறைகள்:  இரண்டு முரண்பாடான குறள்கள் ‘உழவு’ அதிகாரத்திலே இடம்பெற்றுள்ளன. 1037வது குறள் ‘ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி பலமுறை உழுதால் ஒரு கைப்பிடி எருவும் இல்லாமல் அப்பயிர் செழித்து வளரும்’ என்கிறார். அடுத்தக் குறளிலே (குறள் 1038) ‘உழுவதைக் காட்டிலும் எரு விடுதல் நல்லது’ என்றும் ‘நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் அப்பயிரைப் பாதுகாப்பது நல்லது’ என்கிறார். சற்று உற்று நோக்கினால் இப்புதிர் விளங்கும். முதல் குறள் புன்செய் நிலத்துக்குறியது. இரண்டாம் குறள் நன்செய் நிலத்துக்குரியது. 3   புன்செய் நில மண்ணைப் பல முறை உழுதால் மண் நல்ல புழுதியாகும். பலம் என்று வள்ளுவர் கூறும் அளவு விகிதாச்சார அளவு. ஒரு பலம் என்பது 35 கிராம். கஃசா என்பது பலத்தில் கால் பகுதி. அதாவது 8.75 கிராம். 4 இந்த விகிதாச்சார அளவில் உண்டான புழுதியில் மழை நீர் நன்றாக ஊறி இறங்கும். பயிரின் வேரும் ஆழச் சென்று பரவும். அதனால், வெப்பத்தையும் தாங்கி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது வள்ளுவர் கூறும் புன்செய் முறை. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. இதற்குக் காரணம், நீர் ஊரிய புழுதி மண்ணில் காற்று வீ...