எம்.ஜி.யார். பற்றிய கட்டுரை அல்ல இது. சினிமா நடிகர்கள் பேசும் புரட்சி வசனங்களில் மயங்கி புரட்சித் தலைவரையும், புரட்சிக் கலைஞரையும், புரட்சித் தளபதியையும் உருவாக்கியவர்கள் நாம். இவை வெறும் பட்டங்களாக யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கப்படுவதால் உண்மையான புரட்சி நாயகர்கள் நம் டீ-ஷர்ட்டுகளில் வெறும் வியாபார பண்டமாக படங்களாகிப் போனார்கள். ஆனால், புரட்சி என்பது வேறு. ‘உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா’ என்ற பொது அறிவுத் தகவலைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்பாகவே மிகச் சிறு வயதிலேயே ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பெயரை நான் தெரிந்து வைத்திருந்தேன். தலைவர்களின் பிம்பம் எப்போதுமே பார்த்த நொடியிலேயே நம்மை ஈர்த்துவிடும். ஃபிடலின் தோற்றமும் அப்படியானது. ‘உழைத்தால் உயரலாம். யார் உழைக்க? யார் உயர?' என்ற புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது. உழைக்கும் மக்கள் கியூபர்கள். அவர்களின் உழைப்பை சுரண்டி உயர்ந்தவர்கள் ஸ்பானியர்களும் அமெரிக்கர்களும். யார் அதிகம் சுரண்டுகிறார்கள் என்பதுதான் போட்டி. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். பாதிக்கப்படுவது என்னவோ உழைக்கும் வர்க்கம்தான். ...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!