எம்.ஜி.யார். பற்றிய
கட்டுரை அல்ல இது. சினிமா நடிகர்கள் பேசும் புரட்சி வசனங்களில் மயங்கி புரட்சித்
தலைவரையும், புரட்சிக் கலைஞரையும், புரட்சித் தளபதியையும் உருவாக்கியவர்கள் நாம்.
இவை வெறும் பட்டங்களாக யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கப்படுவதால் உண்மையான புரட்சி
நாயகர்கள் நம் டீ-ஷர்ட்டுகளில் வெறும் வியாபார பண்டமாக படங்களாகிப் போனார்கள்.
ஆனால், புரட்சி என்பது வேறு.
‘உலகின் சர்க்கரைக்
கிண்ணம் கியூபா’ என்ற பொது அறிவுத் தகவலைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்பாகவே மிகச்
சிறு வயதிலேயே ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பெயரை நான் தெரிந்து வைத்திருந்தேன்.
தலைவர்களின் பிம்பம் எப்போதுமே பார்த்த நொடியிலேயே நம்மை ஈர்த்துவிடும். ஃபிடலின்
தோற்றமும் அப்படியானது.
‘உழைத்தால் உயரலாம்.
யார் உழைக்க?
யார் உயர?'
என்ற புதுக்கவிதை
நினைவுக்கு வருகிறது. உழைக்கும் மக்கள் கியூபர்கள். அவர்களின் உழைப்பை சுரண்டி
உயர்ந்தவர்கள் ஸ்பானியர்களும் அமெரிக்கர்களும். யார் அதிகம் சுரண்டுகிறார்கள்
என்பதுதான் போட்டி. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்.
பாதிக்கப்படுவது என்னவோ உழைக்கும் வர்க்கம்தான்.
அந்த உழைக்கும் வர்க்கத்தின்
நாயகனான ஃபிடல் ஸ்பானிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது ஆச்சர்யத்தைத் தரலாம்.
ஸ்பெயின் நாட்டின் இராணுவ வீரரான ஃபிடலின் தந்தை கியூபாவின் அழகில் சொக்கி போர்
முடிந்ததும் இங்கேயே வந்து தங்கிவிடுகிறார். கடுமையாக உழைக்கிறார். உழைப்பு
என்றால் கரும்புத் தோட்டங்களில் இறங்கி வேலை செய்வது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி
நிலத்தின் உரிமையாளராகிறார் (பண்ணையாராக). இவரும் ஸ்பானியர்தானே. அதனால் நிலவுடைமை
உண்டு. பணக்கார குடும்பத்தில் பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் தந்தையின் தோட்டங்களில்
சிலர் மட்டும் கடுமையாக உழைப்பதையும் தன் தந்தை சொகுசாக வாழ்வதையும், தான் வேலை
செய்யாததையும் அதே சமயம் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் இதே தோட்டத்தில் வேலை
செய்வதையும் பார்த்த ஃபிடல் சிந்திக்க ஆரம்பித்தார். அந்தச் சிந்தனைதான் கியூப
புரட்சியின் வித்து.
இளமையிலேயே மிகவும்
சுட்டித்தனமான ஃபிடல் படிப்பதில் சோடையாகிவிடவில்லை. படிப்பதில் அவருக்குத் தீராத
ஆர்வம். பள்ளியிலேயே ஆசிரியரை எதிர்த்து கோபித்துக்கொள்ளும் ஃபிடல், முதல்
மதிப்பெண் வாங்குவதை பார்த்து அவர் ஆசிரியர்களே அதிசயித்துப் போயினர். கல்விதான்
இந்த மக்களை காப்பாற்றும் என்பதில் தெளிவாக இருந்தார். கியூப வரலாற்றை ஆர்வமாக
படித்தார். இவருக்கு முன்பே சிறு சிறு போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களை
வாசித்தார். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் மாணவத்
தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போதிருந்தே அவருக்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது.
எப்போதும் துப்பாக்கியுடந்தான் எங்கும் செல்வார். போராட ஆரம்பித்தார். அதாவது
மக்களை ஒருங்கிணைப்பது; புரட்சி செய்வது. அதுவும் ஆயுதம் ஏந்திய புரட்சி. சே
குவேரா என்ற இன்னொரு சக்தியும் இணைந்து கொண்டது. அதன் பின் நடந்தது எல்லாம்
வரலாறு.
புரட்சியின் பலனாய்
மக்கள் விடுதலை அடைந்தனர். புரட்சிக்குப் பிறகான முப்பது ஆண்டுகள் மிகக் கடுமையான
சட்ட திட்டங்களுடன் ஆட்சி நடந்தது. அதிபரான ஃபிடல் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்
என்று மக்கள் நினைத்தனர். அதே சமயம், ஃபிடலால் மட்டும்தான் சிறந்த் நிர்வாகத்தை
அளிக்க முடியும் என்றும் நம்பினர்.
ஃபிடலிடமே மொத்த
அதிகாரமும் குவிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை
என்று தெரியவில்லை. காரணம், கியூபாவில் இன்றும் ஆயுதமேந்திய போரட்டத்துக்கு
அனுமதியுண்டு. நினைத்துப்பாருங்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில்
கூட இது சாத்தியமா? மாணவர்களும் விவசாயிகளும் இங்கு ஆயுதம் ஏந்தி போராட உரிமை
இருக்கிறதா? ஆனால் கியூபாவில் இருக்கிறது.
விடுதலை பெற்று
தருவதைவிட நிர்வாகம் செய்வதுதான் கடினமானது. இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட
விடுதலைக்குப் பிறகு நாட்டை எந்தத் திசையில் கொண்டு செல்வது என்பதுதான் சவால். கியூபாவில் புரட்சி முடிந்து 30 ஆண்டுகளில், எப்போதுமே
தலைவர்கள் படங்கள் இருந்ததே கிடையாது. ஃபிடலின் படம் அதிகாரப்பூர்வமாக கிடையாது.
புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்த முதல் சில மாதங்களிலேயே அது தடை
செய்யப்பட்டுவிட்டது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்களைப் பள்ளிகளுக்கும்,
நிறுவனங்களுக்கும், பிற ஆலைகளுக்கு சூட்டுவதும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. நிறைய
மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே சமயம், அது கொடுங்கோலான ஆட்சி மாதிரிதான்
இருந்திருக்கும் மக்களுக்கு.
நான் முன்பு குறிப்பிட்டதைப் போல கல்வியின் மீது தீராத பிரேமை கொண்டவர்
ஃபிடல். ஒருநாளைக்கு 14-15 மணி நேரம் வீதம் இரண்டு ஆண்டு காலம் சிறையில்
படித்துக்கொண்டே இருந்தாராம். “வாழ்நாள் முழுவதும் எத்தனை முடியுமோ அத்தனை
புத்தகங்களைப் படித்து வந்திருந்தபோதும், படிப்பதற்கு நேரம் போதவில்லை என்ற குறை
எனக்கு எப்போதும் உண்டு. நூலகங்களையும், புத்தகங்களின் பட்டியலையும்
பார்க்கும்போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிடமுடியவில்லையே
என்று வருந்துவேன்” என்றவர் அவர்.
இன்னமும் எனக்கு அவர் மீது பெரும் வியப்பும் மரியாதையும்,
இன்னும்
சொல்லப்போனால் கண்கலங்கி நான் நிற்பதும் கல்விக்கு அவர் செய்த
செயல்கள்தான். புரட்சிக்குப் பிறகு கியூப மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று
அவர் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். ஆலைகளுக்கும் குழந்தைகள் இல்லாத
வீடுகளுக்கும் கொடுக்கப்படும் மின்சாரத்தைக் குறைத்து அதை குழந்தைகள் இருக்கும்
வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுத்தவர் அவர். ஒருபோதும் பள்ளிகளில் மின்வெட்டு
இருந்ததில்லை. கியூப ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களுடன் உலகின் மிகச்
சிறந்த புத்தகங்களும் விற்கப்படுமாம். இதுமாதிரி உலகில் எங்காவது நீங்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
11 அமெரிக்க ஜனாதிபதிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர்
ஃபிடல். ஒருபோதும் அடிபணிந்தவர் அல்லர். ‘தக்கினியூண்டு’ கியூபா ‘அம்மாம் பெரிய
வல்லரசு’ அமெரிக்காவை ஆட்டி வைப்பது என்பது சாதாரணமான விஷயமா? அமெரிக்காவின்
ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார் ஃபிடல். ‘அமெரிக்கா போன்ற நாடுகளில்
இருப்பது ‘ஒற்றை வர்க்க ஆட்சி’ என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். அங்கு கடின உழைப்பை
மேற்கொள்ளக்கூடிய பணிகளில் ஈடுபடுவோர் வெள்ளையர்கள் அல்லர். கருப்பின மக்கள்,
துருக்கியர்கள், ஆசியர்கள், புலம் பெயர்ந்தோர் ஆகியோர்தான். இது ஒரு புதுவகை அடிமை
முறை. மரணதண்டனை வழங்குவதில் கிரிமினல் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள் என்ற
வேறுபாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அத்தண்டனை
வெள்ளையருக்கு வழங்கப்படுவது அரிது.’ அமெரிக்காவில் இருப்பதும் ஜனநாயகம்தான். கியூபாவில் இருப்பதும் ஜனநாயகம் தான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல
என்கிறார் ஃபிடல். அமெரிக்காவில் இருப்பது முதலாளித்துவ ஜனநாயகம். கியூபாவிலோ
சோசலிஷ ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம்
முதலாளித்துவ அமைப்பினுள் இருக்கவே முடியாது. அது சோசலிச அமைப்பினுள் மட்டுமே நிலவ
முடியும் என்றும் தெளிவாக்குகிறார். ஐ.நா சபையிலேயே ஜனநாயகம் இல்லை என்று அவர்
சொல்வது உண்மைதானே?
இப்படியெல்லாம் பேசினால் அமெரிக்கா என்ன வாயில் விரல்
சூப்பிக்கொண்டிருக்குமா? ஃபிடலைக் கொல்ல 638 முறை (ஆமாம். நீங்கள் சரியாகத்தான்
வாசிக்கிறீர்கள். 638 முறை) முயற்சி செய்ததாம் அமெரிக்க உளவுத்துறை. எப்படி?
ஃபிடலின் சிகரெட்க்குள் விஷம் வைத்து, ஸ்க்யூபா டைவிங்கின்போது அவர் உடுத்தும்
உடையில் விஷக்கிருமிகளை வைத்து.....என்ன செய்தாலும் 638 முறையும் அமெரிக்காதான்
தோற்றுப்போனது.
ஃபிடல் கல்விக்கு எப்படி முன்னுரிமை கொடுத்தாரோ அதற்கு
நிகராக மருத்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்தார். இங்கேதான் இந்திய அணுகுமுறையும்
கியூப அணுகுமுறையும் வேறுபடுகிறது. கியூபா மின் அணுவில், உதிரிப்பாகங்கள்
தயாரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஜப்பான், அமெரிக்கா போன்று கணிணி தயாரிப்பில்
போட்டி போடுவதில்லை. ஆனால், மருத்துவம், சுகாதாரம் போன்ற குறிப்பான துறைகளில்
தேவையான சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
கம்யூனிசமும் சோசலிசமும்
தோற்றுப்போன சித்தாந்தம் என்று அரற்றுவோர் பலர் உள்ளனர். ஆனானப்பட்ட சோவியத்
ரஷ்யாவிலேயே தோற்றுப்போய்விட்ட அது, இனி உலகின் வேறு நாடுகளில் வளர வாய்ப்பே இல்லை
என்போர்க்கு ஃபிடல் தான் விடை. உண்மையான, நேர்மையான சித்தாந்தம் எதுவும்
தோற்றுப்போவதில்லை. சித்தாந்தத்தின் குரல்வளையை இறுகப் பிடித்துக்கொண்டு காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யாமல் போகும்போதுதான் அது தோற்றுப் போகிறது. இதை
ஃபிடல் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தார். “மண்ணுக்கேற்ற மார்க்சியம்
வேண்டும்” என்று சொல்கிறார் அவர். ஃபிடலையும் கியூபாவையும் தனித்தனியாகப்
பிரித்துப் பார்க்க முடியாது.
ஃபிடலின் இறப்பு
வருத்தமானதுதான். ஆனால், அவரையும் அவர் வழிநடத்திய புரட்சியையும் நினைக்கும்போது
வருத்தம் ஏற்படவில்லை. பெருமிதம்தான் உண்டாகிறது.
ஃபிடலின் நேரடி வார்த்தைகளில் இந்தக் கட்டுரையை
முடிக்கிறேன். “நாம் தொடர்ந்து கனவு காண
வேண்டும் – நல்லதொரு உலகம் உண்மையில் உருவாகும் என்று; காரணம், தொடர்ந்து
போராடினால், அது கைகூடும். மனிதகுலம் தனது கனவுகளை, இலட்சிய உலகைக் கைவிடவே
கூடாது. என்னைப் பொருத்தவரை ஒரு புரட்சியாளன் கனவு காண்பதை எப்படி
நிறுத்துவதேயில்லையோ அதுபோல, போராட்டத்தை ஒருபோதும் கைவிடுவதில்லை”.
உண்மையான புரட்சித் தலைவன், - ஃபிடல்!!!
0 கருத்துகள்