தாஜ்மகாலின் அழகை ஒற்றைச் சலவைக்கல் கொண்டு வர்ணித்துவிட முடியுமா? அது போல், தந்தை பெரியாரைப் பற்றி, என்னுள் அவர் வீற்றிருக்கும் இடத்தைப் பற்றி பத்து நிமிடங்களில் பேசிவிட முடியுமா? ஆனாலும், அந்த முயற்சியைத்தான் இப்போது செய்யப் போகிறேன். அனைவருக்கும் வணக்கம். 1800களின் இறுதியில் பிறந்து 1973இல் இறந்து போன ஒரு மனிதனைப் பற்றி 2017இல் 25 வயதேயான நான் பேசுகிறேன் என்றால் அதற்கான தேவை எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்வியிலிருந்து தான் பெரியார் என்னுள் எப்படி உருவாகி, உருமாறி வந்திருக்கிறார் என்று என்னிலிருந்து தள்ளி நின்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என்னுள் பெரியார் எப்படி இருக்கிறார் என்பதை எங்கெங்கெல்லாம் எனக்குப் அவர் தேவைப்படுகிறார் என்று கேட்டுப் பார்க்கிறேன். எங்கெல்லாம் தேவைப்படுகிறார் என்று யோசித்தால் எல்லா இடத்திலுமே எனக்குத் தேவைப்படத்தான் செய்கிறார். முதலில், எது பெரியார் இல்லை என்று சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் இன்றைக்கு மிக முக்கியம். மேடையில் பேசுகிறோமே, இந்தப் பெரியார் முழுமையானவர் அல்லர். பேச்சுப்போட்டிக்காகவும் கட்டுரைப்போட்டிக்காகவும் தொலைக்காட்சி செய்திகள...
கனவு காண்பதும் அது கலைந்து போவதும் தான் எவ்வளவு அழகு!