தாஜ்மகாலின் அழகை ஒற்றைச் சலவைக்கல் கொண்டு வர்ணித்துவிட முடியுமா? அது போல், தந்தை பெரியாரைப் பற்றி, என்னுள் அவர் வீற்றிருக்கும் இடத்தைப் பற்றி பத்து நிமிடங்களில் பேசிவிட முடியுமா? ஆனாலும், அந்த முயற்சியைத்தான் இப்போது செய்யப் போகிறேன். அனைவருக்கும் வணக்கம்.
1800களின் இறுதியில் பிறந்து 1973இல் இறந்து போன ஒரு மனிதனைப் பற்றி 2017இல் 25 வயதேயான நான் பேசுகிறேன் என்றால் அதற்கான தேவை எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்வியிலிருந்து தான் பெரியார் என்னுள் எப்படி உருவாகி, உருமாறி வந்திருக்கிறார் என்று என்னிலிருந்து தள்ளி நின்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என்னுள் பெரியார் எப்படி இருக்கிறார் என்பதை எங்கெங்கெல்லாம் எனக்குப் அவர் தேவைப்படுகிறார் என்று கேட்டுப் பார்க்கிறேன். எங்கெல்லாம் தேவைப்படுகிறார் என்று யோசித்தால் எல்லா இடத்திலுமே எனக்குத் தேவைப்படத்தான் செய்கிறார்.
முதலில், எது பெரியார் இல்லை என்று சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் இன்றைக்கு மிக முக்கியம். மேடையில் பேசுகிறோமே, இந்தப் பெரியார் முழுமையானவர் அல்லர். பேச்சுப்போட்டிக்காகவும் கட்டுரைப்போட்டிக்காகவும் தொலைக்காட்சி செய்திகளிலும் பத்திரிகைகளிலும் எழுதப்படுபவர் முழுமையான பெரியார் அல்லர். நீங்கள் நேரடியாகவே பெரியாரை அவர் எழுத்துக்களின் மூலம் அறிவதே அவரை முழுமையாப் புரிந்துகொள்ள உதவும். “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்று ஒரு குறள் வரி இருக்கிறது. அது போல, பெரியாரை நாம் அறிய அறிய நம்முடைய அறியாமை விலகும்.
சொல் என்பது வெறும் சொல் அன்று; பெயர் என்பது வெறும் பெயர் அன்று. எல்லாவற்றையும் நீங்கள் “இது வெறும் சொல்தானே?” என்று கடந்து விடமுடியாது. சாதி என்பதும் மலம் என்பதும் தலித் என்பதும் வெறும் சொல் அல்ல. அதுபோல், பெரியார் என்பதும் சொல் அன்று. அது ஒரு வரலாறு; ஒரு காலத்தின் குரல். இதை நீங்கள் உணர வேண்டும் என்றால் இந்துத்துவா பேசுபவர்களிடம் “நான் பெரியார் வழியில் நடப்பவன்” என்று சொல்லிப்பாருங்கள். நீங்கள் ஒரு ஆண்டி-இந்தியன் (Anti-Indian) ஆகிவிடுவீர்கள்.
இப்போது இந்துத்துவத்துக்கு வருவோம். மதங்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள். அதில் இந்து மதம் மற்ற வகைமையில் இருந்து வேறுபட்டது. இது ஒரு கூட்டு மதம். அதாவது, எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் தன்மை இந்து மதத்துக்கு உண்டு. நீங்கள் சைவம் பேசினாலும், சாங்கியம் பேசினாலும், வைணவம் பேசினாலும் இந்து மதத்துக்குள் வந்துவிடுவீர்கள். அவ்வளவு ஏன், நீங்கள் நாத்திகம் பேசினால் கூட இந்து மதத்துக்குள் வந்துவிடுவீர்கள். இந்த இந்துத்துவர்கள் அம்பேத்கரைக் கூட தனதாக்கிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு இந்து மதத் தலைவர் சொல்கிறார்: “அம்பேத்கர் பௌத்த மதத்துக்குத் தானே மாறினார்? அவர் கிறித்துவத்துக்கோ இஸ்லாத்துக்கோ மாறவில்லையே? பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளை; இந்து மதத்தின் குழந்தை. அதைப் புரிந்து கொண்டதனால்தான் அம்பேத்கர் அந்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார்” என்கிறார். இவர்கள் எப்படித் திரிக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? இதையெல்லாம் பெரியார் யோசிக்காமலா இருந்திருப்பார்? அதனால்தான் அம்பேத்கர் பௌத்த மதத்துக்கு மாறச் சொல்லி பெரியாரை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இந்த மதத்துக்குள் இருந்தே இதை எதிர்க்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அம்பேத்கரை, காந்தியை என்று எல்லோரையும் தனதாக்கிக் கொள்ளும் இந்து மதம் இன்று வரை பெரியாரை மட்டும் இந்த வலைக்குள் இழுக்கவில்லை. அதுதான் பெரியாருக்குக் கிடைத்த வெற்றி என்று நான் நினைக்கிறேன். இந்தத் தொலைநோக்குச் சிந்தனைத் தெளிவுதான் பெரியாரிடம் நான் விரும்புவது. என்னுள் பெரியார் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளராக இருக்கிறார்.
அவருடைய சிந்தனைத் தெளிவு எந்த அளவுக்கு நுட்பமானது என்பதற்கு ஓர் உதாரணம். பெரியாருக்கு வணக்கம் சொல்வது பிடிக்காது. கை கொடுக்க வேண்டும் என்பார். காரணம், வணக்கம் சொல்லுதலே ஒரு வகையான தீண்டாமை என்று கருதியவர். கை கொடுக்கும் போது தான் நீங்கள் மற்றவரை உங்களுக்குச் சமமானவராக நினைக்கிறீர்கள் என்று சொல்வார்.
இரண்டாவது அவருடைய பெண்ணியம்.
இந்தச் சமூகத்தில் ஒன்றைப் பற்றி பேசக்கூடாது என்றால் அதற்கு இரண்டு உத்திகளைக் கையாள்வார்கள். ஒன்று அதைப் புனிதப்படுத்துவது; இரண்டு அதை இழிவுப் படுத்துவது. வேதம் பற்றி யாரும் பேசக்கூடாது; ஏனென்றால், அதைப் புனிதப்படுத்திவிட்டார்கள். மலம் பற்றியும் பேசக்கூடாது; ஏனென்றால், அதை இழிவுப் படுத்திவிட்டார்கள். இந்த இரண்டையுமே உடைத்தவர்தான் பெரியார். பெண்களை இப்படி கற்பு என்பதற்குள் தள்ளி புனிதப்படுத்துவதாக இழிவுப்படுத்தியதை பெரியார் உடைத்தார்.
1928இல் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் பெண்களுக்குத்தான் இப்போது அறிவுரை தேவைப்படுகிறது. பெண்கள் தான் மாற வேண்டும். தங்களுக்கான உரிமைகளைத் தாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஈ. வெ. ராமசாமி என்பவர்க்கு பெரியார் என்ற பெயரைப் பெண்கள்தான் கொடுத்தனர் என்பது நமக்குத் தெரியும். ஏன் தெரியுமா கொடுத்தனர்? ஏனென்றால், ஒரு பெண்ணுக்குச் சரியான தந்தையாகப் பெரியார் மட்டும்தான் இருந்தார். ‘உன்னுடைய கல்வியில் நீயே முடிவெடுத்துக் கொள், உன்னுடைய துணையை நீயே தேர்ந்தெடுத்துக் கொள், உன்னுடைய முடிவுகளை நீயே எடுத்துக்கொள்’ என்று ஒரு பெண்ணுக்கு அறிவையும் தன்னம்பிக்கையையும் விதைத்தவர் பெரியார்தான்.
மூன்றாவது அவருடைய துணிச்சல்.
என்னை மிகவும் கவர்ந்த பெரியாரின் பண்புகளில் அவருடைய துணிச்சலும் ஒன்று. இட ஒதுக்கீடு காங்கிரசால் கிடைக்காது என்று தெரிந்தபின் 1925இல் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறுகிறார் பெரியார். சும்மா வரவில்லை. அந்த மேடையிலேயே “இனி காங்கிரசை இந்த மண்ணிலிருந்து ஒழிப்பதுதான் என் வேலை” என்று சொல்லி வெளியேறுகிறார். அவரோடு சிலர் மட்டுமே வருகிறார்கள். எந்த நம்பிக்கையில் அத்தனைப் பெரிய முடிவை அவர் எடுத்தார்? எத்தனை பேர் அவரோடு வருவார்கள் என்று தெரியாது. ஆனாலும் அந்த முடிவிலிருந்து அவர் பின் வாங்கவில்லை. சொன்னது மாதிரியே காங்கிரைசை தமிழ் நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டினார். இன்று வரை காங்கிரசால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. (இடையில் காமராஜர் ஆட்சியைப் பிடித்ததற்கும் பெரியார் ஒரு முக்கியமான காரணம் என்பது உப தகவல் என்றாலும் முக்கியமானத் தகவல்.) சொல்லைச் செயலாக்கும் துணிச்சல்காரராக என்னுள் பெரியார் இருக்கிறார்.
எங்கே சென்றாலும் பெரியார் தேவை என்று சொன்னேன் அல்லவா? அதனால் இட ஒதுக்கீடு பற்றியும் பேசியாக வேண்டும். இப்போது ஒரு குரல் எழுந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வருவதுதான் சரி, சாதி ரீதியான ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை நீக்கி விடலாம். நானும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால், எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மட்டுமல்ல, எல்லோரும் மலம் அள்ளலாம், எல்லோரும் சவரம் செய்யலாம் என்ற நிலை வரட்டும். அப்போது இதை நீக்கலாம். இன்றைக்கும் துப்புரவுப் பணியை (அரசாங்கப் பணி என்றாலும்) குறிப்பிட்ட சாதியினர் தானே அதைச் செய்கிறார்கள்? அப்படி இருக்கும்போது சாதி ரீதியான இட ஒதிக்கீட்டை நீக்க வேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனமானது அல்லவா? பாலைவனத்தில் வளரக்கூடிய ஒரு செடிக்கு ஊற்றக்கூடிய நீரும் நல்ல நில வளமும் நீர் வளமும் கிடைத்த செடிக்கு ஊற்றக்கூடிய நீரும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்? அதுதான் இட ஒதுக்கீடு. இது சலுகையன்று; உரிமை.
சவுதி அரேபியாவில் சோஃபி என்ற பெண்(?) ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது சவுதி அரேபிய அரசு. ரோபோக்களே சிந்திக்கக்கூடிய அளவு தொழில்நுட்பம் வளர்ந்த உலகில் வாழ்கிறோம் நாம். அனால், மனிதர்களிலேயே இன்னும் பலர் சிந்திக்காமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறது குறள்.
எந்தத் தன்மையில் சொன்னாலும் அதன் மெய்ப்பொருள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. பெரியார் சொல்லும் தன்மை சில நேரங்களில் கடுமையாக இருக்கும். சில நேரத்தில் கடப்பாறையால் உடைப்பது போலிருக்கும். ஆனால் அவர் சொல்வதன் மெய்ப்பொருள் பார்த்தால் உண்மை விளங்கும். எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு கடப்பாறையைப் பயன்படுத்தியவர் பெரியார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது அறுவை சிகிச்சை கிடையாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆகாயம் வரை எழுப்பப்பட்ட மிகப்பெரும் கட்டடம். இந்தக் கட்டடத்தை இடிப்பதற்குக் கடப்பாறைதான் தேவை. அதைப் பெரியார் திறமையாகவேச் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எப்போதையும் விட இன்றைக்குத்தான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். பல இந்துத்துவ முட்டாள்கள் இருக்கும் இந்த நாட்டில் நம் எல்லோருக்கும் பெரியார் தேவைப்படுகிறார்.
இங்கே கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். திருச்சியில் ஒரு இலக்கிய நிகழ்வு. பெரியார் பேசுகிறார். அவருக்குப் பின் பேசிய எழுத்தாளர் ஜெயகாந்தன் “பெரியார் மீது நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், அவர் இப்போது பேசிய எந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டும் என்பதை பெரியார் சொல்லக்கூடாது” என்கிறார். கூட்டம் சலசலக்கிறது. ஜெயகாந்தனுக்கு எதிராக சிலர் கிளம்புகிறார்கள். அப்போது பெரியார் “என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு முழு உரிமை இருப்பது போல் உங்களுடைய கருத்தைச் சொல்ல உங்களுக்கும் உரிமை உண்டு. உங்களைச் சொல்லக்கூடாது என்று என் ஆட்களில் யாராவது சொன்னால் அவர்களை எதிர்ப்பதில் முதல் ஆளாக நான்தான் இருப்பேன்” என்றார் ஜெயகாந்தனிடம். கருத்துச் சுதந்திரத்துக்கு அந்தளவு மதிப்பு கொடுத்தவர் பெரியார். ஆனால் இன்றைய நிலை என்ன என்று உங்களுக்கே தெரியும்.
யார் குரு? வழிகாட்டுபவர் அல்லர் குரு; வாழ்ந்து காட்டுபவரே குரு. பெரியார் வாழ்ந்து காட்டினார். அவர் வழி காட்டுபவராக மட்டும் இருந்திருந்தால் வழிபாட்டுக்கு உரியவர் ஆகியிருப்பார். நாம் எல்லோரும் அதைத்தான் செய்வோம். பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சிற்பி, சீர்த்திருத்தச் செம்மல் என்று சொல்லி அவரை வழிபாட்டுக்குரியவராக ஆக்கி விடுவோம். ஏனென்றால் அவர் வழி நடத்தலை விட அவரை வழிபடுதல் எளிது. பெரியாரைப் புகழ வேண்டாம்; புரிந்து கொள்ள முயல்வோம். ஆம். நான் புரிந்துகொண்ட வரையில் ஒட்டுமொத்தமாக என்னுள் பெரியார் ஒரு மிகச் சிறந்த குருவாக இருக்கிறார்.
மார்டின் லூதர் கிங்-இன் இந்த வரிகளோடு என்னுரையை முடிக்கிறேன்.
“I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.”
சாதிகள் இல்லாத, மூட நம்பிக்கைகள் இல்லாத, தீண்டாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்க என்றும் நமக்குப் பெரியார் தேவைப்படுவார்.
நன்றி! வணக்கம்!
பி:கு: பாபநாசத்தில் 19.1.2017 அன்று தந்தை பெரியார் 139-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் “சிந்தனைக்களம்” நிகழ்வில் நான் ஆற்றிய உரை.

0 கருத்துகள்