நல்லறம் - நூல் அறிமுகம்

என் பள்ளி ஆசிரியர் திரு. பாவை செ. சங்கர் தான் எழுதிய "நல்லறம்" என்ற நூலை ஒரு நிகழ்வில் எனக்குப் பரிசளித்தார். நேற்று இரவு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது குறித்த பதிவே இது.

"அறம்" என்ற சொல்லை வேறெந்த மொழியிலும் இதே பொருள் தரும்படி பெயர்க்க முடியாது. தர்மம் என்ற சொல் இதற்கு நிகரானது என்று சொல்வார்கள். என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அறம் எந்த அளவுக்கு இருந்தது என்பது ஒருபுறம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அறம் என்பது அதிகம் பதிவு செய்யப்பட்ட அல்லது அதிகம் பேசப்பட்ட சொல். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இலக்கியம் வரை அறத்தைப் பேசுவதுதான் இலக்கியத்தின் நோக்கம்.

அறம் குறித்து சமணர்கள் தான் அதிகம் வலியுறுத்தினர். இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரித்தனர். இதில் இல்லறம் என்பதிலேயே நல்லறம் அடங்கும் என்று சொல்லும் நூல் தான் இது. நான் முன்பு சொன்னதைப் போல் ஒன்றை மட்டும் அறம் என்று வகைப்படுத்தி விட முடியாது. பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அதனால், எல்லாவற்றையும் விளக்க முயலாமல் குறிப்பிட்ட ஆறு அறங்களை மட்டும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

கடைசியில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக அல்ல, பொருள் கருதி கடைசி கட்டுரையைத் தான் முதலில் வாசித்தேன். "நூலக அறிவு" என்னும் அந்தக் கட்டுரை வாசிப்பின் முக்கியத்துவத்தையும் நூல்களால் உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. சீன அறிஞர் யுவான் சுவாங் தொடங்கி நம்மூர் எழுத்தாளர் சுஜாதா வரை வாசிப்பு குறித்து பேசிய, வலியுறுத்திய பெரும்பாலோனோர் பற்றி எழுதுகிறார். சரஸ்வதி மகால் உருவாக திருக்குறள் தான் காரணம் என்பதையும் அண்ணா, நேரு போன்றவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்தும் சிறு சிறு சம்பவங்கள் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். எல்லார் வீட்டிலும் படுக்கையறை, சமையலறை, குளியலறை இருப்பது போல் ஏன் புத்தக அறை இருப்பதில்லை என்று ஆதங்கப்படுகிறார். குறைந்தது புத்தக அலமாரியாவது ஒதுக்குங்கள் என்கிறார்.

காலம், சினம், முயற்சி, நா காக்க, மதம் என்னும் மற்ற ஐந்து கட்டுரைகளிலும் இதே போல் விரிவாகப் பேசுகிறார். எல்லாக் கட்டுரைகளிலும் அதன் முக்கியத்துவம், பெருமை குறித்து பேசும் ஆசிரியர் மதம் என்ற தலைப்பில் மட்டும் மதத்தின் பெருமை பேசாமல் அதன் பெயரால் நடந்தேறும் சிறுமைகள் குறித்துப் பேசுகிறார். மதம் எப்படி மனிதர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் கடவுளைக் காப்பதில் மட்டும் கவனம் கொள்கிறது என்று பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் விளக்குகிறார்.

சில சுவாரசியமான தகவல்களும் இருக்கின்றன. ஜப்பானியர்கள் நேரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நமக்குத் தெரியும். எவ்வளவு? ஜப்பானில் ஒரு நொடி கூட தாமதமாக ரயில் வராது என்றுதானே நினைக்கிறீர்கள்? அது மட்டும் அல்ல. அவர்கள் எல்லாவற்றிலும் நேரத்தை மிச்சபடுத்தவே முயல்வார்கள் என்பதற்கு உதாரணம் தான் அவர்களின் தேசிய கீதம் வெறும் நான்கே அடிகள் கொண்டதாகவும், கவிதைகளை ஹைக்கூ என்று சில சொற்களில் அடக்கி விடுவதாகவும் இருக்கிறது.

வளையாபதி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பிரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள், பாரதி, பாரதிதாசன் என்று பழைய இலக்கியங்களில் இருந்து ஏகப்பட்ட மேற்கோள்களைச் சுட்டுகிறார். முயற்சிக்கு எடுத்துக்காட்டாக எடிசன், ஹெலன் கெல்லர் போன்று பழையவர்களின் கதைகளை மட்டும் பேசாமல், சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குறித்தும் நினைவு  படுத்துகிறார்.

ஒவ்வோர் கட்டுரைக்கும் ஏற்ற திருக்குறளோடு தொடங்கி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.

இந்த நூலை எழுதியவர் ஓர் பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொனியிலேயே நூல் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், மற்றவர்களின் மேற்கோள்களும் வாழ்க்கைக் குறிப்புகளையும் மட்டுமே அடுக்கிச் செல்வதால் ஒவ்வொன்று குறித்தும் ஆசிரியரின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவதில்லை. இதையே இந்நூலின் குறை என்று நான் கருதுகிறேன். ஆனால், மாணவர்களுக்கு பெரிய அளவில் இது ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர் தன் சொந்த வாழ்வின் அனுபவங்களையும் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். என்றாலும், எழுத்து நடை மிகச் சரளமாக இருக்கிறது.


அறம் என்றால் நயன்தாரா நடித்த படம் என்று மட்டும் புரிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அவசியம்தான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்