ஃபேஸ் புக் உலகில் தமிழ் - வாழுமா? சாகுமா?
தலைப்பை படித்தவுடனே 'இது என்ன அபத்தமான கேள்வி?' என்று உங்களுக்குத் தோன்றலாம். இப்படி எழுதியவன் எவனோ அவன் விலாசம் அறிந்து விலா எலும்பை முறிக்க வேண்டும் என்றும் தோன்றலாம். தலைப்பு என்பது பூவைத் தலையில் வைக்கும் பூப் போல. பூவைப் பார்த்தே பூவையின் அழகை அறிந்துவிடமுடியாது. அதுபோலத்தான் இத்தலைப்பும்.
உண்மையைச் சொல்லப் போனால், இந்த தலைப்பை இரண்டு தரப்பினர் ஆர்வமாகப் படிப்பர். "என்ன எழுதியிருக்கிறான்" என்ற ஆர்வத்தில் பார்க்கும் என் நண்பர்கள். இன்னொரு தரப்பு, 'தமிழ் அபிமானிகள்' என்று சொல்லிக் கொள்(ல்)பவர்கள். ஏதேனும் சிக்காதா என்று பூதக்கண்ணாடிக் கொண்டுத் தேடுபவர்கள். ஒரு வரி தமிழுக்கு எதிராக எழுதுவதுப் போல் தோன்றினாலே எழுதியவனை நையப் புடைப்பவர்கள். சரி, வளர்த்தது போதும், விஷயத்துக்கு வருகிறேன்.
தமிழ் மொழி என்று தோன்றியது என்பதில் முடிவான முடிவு இன்னும் ஏற்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எப்போது தொன்றியதோ அது முதல் இன்று வரை தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல், தொழில் நுட்பப் புரட்சி, ஆங்கில மோகம், ஃபேஸ் புக் உலகம் என்று இருக்கும் இன்றைய உலகைப் பார்த்தால் வைத்த தலைப்பு கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதானோ என்று தோன்றுகிறது.
காலம்தோறும் தமிழுக்கு பல இடர்பாடுகள் வந்துள்ளன. வடமொழியால் அமுக்கப்பட்டதும், பிற மொழிகளால் கலப்படம் செய்யப்பட்டதும் நடந்துக்கொண்டே வந்திருக்கின்றன. இருந்தும் தமிழ் தன் ஜீவனை இழக்கவில்லை.
ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமையாக வைத்திருந்தனர். அப்போது நாம் யாரும் அடிமையாய் இருப்பதை விரும்பவில்லை. ஆனால், இன்று நாமே விரும்பி ஆங்கிலத்துக்கு அடிமையாகி விட்டோம் என்பது வருத்தமாக இருக்கிறது. ஆங்கிலம் சிறந்த மொழி என்பதை அதை அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே முரண் என்னவென்றால், தமிழ் அறிந்தோர் பலர் தமிழை நனி சிறந்த மொழி என்று ஒப்பவில்லை என்பதுதான்.
என் நண்பன் ஒருவன் ராஜஸ்தானில் படிக்கிறான். அவனோடு ஒருமுறை பேசிய போது "இங்கே என்னுடன் தமிழ் நாட்டு மாணவர்கள் யாரும் இல்லை. ஹிந்தியும் ஆங்கிலமும்தான் பேசுகிறேன். தமிழை ரொம்ப miss பண்றேன். பாரதியார் கவிதைகள் மட்டும் தான் என்னோடு தமிழ் பேசுகின்றன" என்று மிகவும் வருந்தி சொன்னான். அங்குள்ள (அ)நாகரிகம் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டான். "நம் தமிழ் கலாசாரத்தை தமிழ் நாட்டிலேயே எதிர்ப்பார்க்கமுடியாத போது ராஜஸ்தானிலே எப்படி எதிர்பார்க்கமுடியும்? இருந்தாலும், நம் பண்பாட்டின் மேன்மையை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை ஆங்கில கலாச்சாரத்திலிருந்து விடுவி" என்றேன். அதற்கு அவன் "அடப் போங்க. நான் தமிழன் என்று சொன்னதற்கே வளராத காட்டுமிராண்டி கூட்டத்திலிருந்து வருபவன் போல் பார்க்கிறார்கள். இதிலே எங்கே பண்பாட்டை விளக்குவது?" என்று நொந்துக் கொண்டான். தமிழைப் பற்றி பேசுபவன் இன்று காலாவதியான மனிதன் என்று கருதப்படுகிறான். ஒரு நூற்றாண்டு முன்னால் பிறந்திருக்க வேண்டியவன் என்று சொல்லப்படுகிறான்.
இன்று ஃபேஸ்புக் - இல் தமிழில் நிறைய பக்கங்கள் உள்ளன. இலக்கியம் பேசாவிட்டாலும் இன்றைய தமிழ் சமூகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் பலர் இவைகளை பகிர்ந்து கொள்கின்றனர். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தன் சொந்த ஊரின் பெயரில் யாரேனும் ஒரு Group உருவாக்கியிருந்தால் அதில் இணைந்துகொள்கின்றனர். எனவே, ஏதேனும் ஒரு வகையில் தமிழ் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லையற்ற எழுத்து சுதந்திரத்தைத் தந்துள்ளன. யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், தாக்கலாம். இதனால் ஒரு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் அபிமானிகள் சொல்கிறார்கள். அதாவது, 'நினைத்தவன் எல்லாம் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறான். எதோ கிறுக்கிவிட்டு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் (என்னைப் போல). தமிழை எவ்வளவு கொச்சைப் படுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே கொச்சைப் படுத்துகிறான். இவர்களால் தரமில்லாத சரக்குகள் தமிழில் வந்துவிடும். அதனால், தமிழின் தூய்மை கெட்டு விடும். இனி தமிழ் எப்படி வாழும்?' என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், இதைப் பற்றி இவ்வளவு கவலைப்படத் தேவை இல்லை. நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தோன்றியவை என்ன தெரியுமா? உண்மையை சொல்லப்போனால், இந்த ஃபேஸ்புக் பதிவர்கள்தான், ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் தான் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் போகிறவர்கள். இவர்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும். தமிழ் தரமற்றுப் போய்விடும் என்று கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை. ஆயிரம் கவிதைகள் தரமற்றதாய் வந்தாலும் அவை எல்லாமே நிலைக்கப்போவதில்லை. சிறந்தவை மட்டும்தான் நிலைக்கும். "காதுக்கு இனிமையாக இல்லாத ஒசையுடைய சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போய் விடும். மற்றவை நிலைக்கும்" என்று தொல்காப்பியர் சொன்னது போல தரமற்ற படைப்புகளும் எழுத்துகளும் காலப்போக்கில் அழிந்து விடும். சிறந்தவை நிலைத்து நிற்கும்.
இறுதியாக ஒன்று சொல்லி முடிக்கிறேன். இணையத்தில் இடம்பெற்ற முதல் இந்திய மொழி என்ற பெருமைக்குரியது நம் தமிழ் தான். எப்போது தன்னை இணையத்தில் இணைத்துக்கொண்டதோ அப்போதே தமிழ் அமரத்தன்மை அடைந்துவிட்டது. தமிழும் மாறிவரும் உலகத்திற்கேற்ப தன்னை 'Upgrade' செய்து கொண்டது. Android app -இல் நுழைந்துவிட்ட தமிழுக்கு அழிவில்லை.
2 கருத்துகள்