யார் இவன்?

பரவாயில்லை...சமூக வலைத்தளங்களில் கணிசமான பகிர்வுகளும் தகவல்களும் பரிமாரப்பட்டுள்ளன. மகிழ்ச்சி.  மகாகவி பாரதியின் 133ஆம் பிறந்த நாள் பகிர்வுகளைப் பற்றிதான் குறிப்பிட்டேன்.

சமூக வலைத்தளங்களையும் செய்தித் தாள்களையும் கவனித்தேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாரதிக்குக் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிது. மத்திய அமைச்சர் தருண் விஜயின் முயற்சியால் பாரதியின் பாடல்களை மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் கிடைத்தக் கூடுதல் கவனம். மகிழ்ச்சியான செய்தி. இதைத்தான் பாரதியும் எதிர்பார்த்தான். தன் பாடல்கள் தீப்பெட்டியை விட மலிவாக விற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். 

பாரதியைப் பற்றி எழுத முற்படும்போது எதை எழுதுவது என்ற தடுமாற்றம் வருகிறது. காரணம், பாரதியின் பன்முக ஆளுமை. எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பாரதி முயற்சித்துள்ளான். இலக்கண விதிகளுக்கு உட்பட்டு செய்யுள்களும் இயற்றியிருக்கிறான். இலக்கணத்தை மீறி புதி விதிகளும் சமைத்திருக்கிறான். அவனுடைய பன்மொழி ஆளுமை, அறிவியல் ஆர்வம், சமகால நிகழ்வுகளின் மீது கவனம் - இதெல்லாம் அவன் கவிதைக்கு மேலும் மெறுகேற்றுகின்றன. 

பாரதியின் பாடல்கள் முழுவதையும் நான் படித்திருக்கிறேன். திரும்ப திரும்ப பாடிப் பரவசமாகியிருக்கிறேன். மோன நிலையைக் கூட அடைந்திருக்கிறேன். பாரதியின் மிக மிக மிக மிக (பாரதியின் தாக்கம்) சிறந்தப் படைப்பாக நான் கருதுவது 'குயில் பாட்டு'ம் 'வசன கவிதை'யும். ஒருமுறை படித்துப் பாருங்கள். வாசிக்கும் எல்லோருக்கும் பரவசம் ஏற்படும். பாரதியிடம் எனக்குப் பிடித்தது புதுமையை விரும்பும் போக்கு. புதிதாக செய்ய வேண்டும் என்ற தவிப்பு. இந்தத் தவிப்பு கொண்ட மகாகவிஞர்கள் சில நூற்றாண்டு இடைவெளியில் தமிழில் வந்துகொண்டுதானிருக்கின்றனர். அப்படி நான் மதிக்கும் புதுமைவிரும்பிகள் இவர்கள் - திருவள்ளுவர், ஔவையார், பாரதியார். 

பாரதியைக் கொண்டாடுவோர் ஒரு புறம். அவனைத் தூற்றுபவர் இன்னொரு புறம். நான் இரண்டு தரப்பினரின் வாதங்களையும் வாசித்திருக்கிறேன். பாரதியைக் கொண்டாடுவோர் அவருடைய பெண் விடுதலைச் சிந்தனை, விடுதலை வேட்கை, தமிழ்க் காதல், தேசியத் தலைவர்கள் பற்றிய பாடல்கள், பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பத்திரிகைத் திறன் பற்றி பேசுவர். எதிர்ப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வப்பட்டேன். அவர்களில் முதலில் இருப்பவர்கள் திராவிடக் கழகத்தினர். அவர்கள் பாரதி ஆரியத்தைத் தூக்கிப் பிடித்தான், அவனுக்கு தமிழ் மேல் காதல் என்பது பொய், பார்ப்பனீயத்தை மறைமுகமாக பரப்பியவன், ஆர். எஸ். எஸ். இன் ஆரம்பம் அவன்தான் என்றெல்லாம் குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஏனென்றால், பாரதி பார்ப்பன வகுப்பில் பிறந்தவர். இத்தனைக்கும் கி. வீரமணி அவருடைய புத்தகங்களில் பல இடங்களில் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாரதி பக்தன், பாரதி பித்தன். ஆனால், எழுத்தாளர் ஜெயமோகனோ பாரதி மகாகவி இல்லவே இல்லை என்று அடித்து பேசுகிறார். எல்லாவற்றையும் படித்த பிறகு ஒன்று புரிந்தது. பாரதியை எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் போற்றலாம் அல்லது தூற்றலாம். ஆனால், எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்க முடியாது. அதுதான் பாரதி.

பாரதி இறந்தபோது வறுமையிலிருந்து மீள  அவர் கவிதைகளை இசையமைத்துத் தர சூரஜ் மால்  என்பவரிடம் அவருடைய குடும்பம் கொடுத்தது. அவர் மொத்தப் பாடல்களையும் சுருட்டிவிட்டார். அவரிடமிருந்து ஏ. வி. மெய்யப்ப செட்டியார் அந்தக் காலத்திலேயே 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் மாலிடம் இருந்து பாரதியின் மொத்தப் பாடல்களையும் மீட்டெடுத்தார். தன்னுடைய படங்களில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர், அவரிடமிருந்து அரசுடமையாக்கப்பட்டது. அதன் பிறகே, பாரதியின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவின. 

அதற்கு மிக முக்கியக் காரணமானவர் தோழர் ஜீவானந்தம். எங்கேயோ கேட்ட பெயர் போல இருக்கிறதல்லவா? வேறெங்குமில்லை. 'கத்தி' படத்தில் எளிய மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரத்திற்கு இவர் நினைவாகத்தான் ஜீவானந்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர்தான் தமிழக சட்டமன்றங்களிலும் பொதுவுடைமைக் கூட்டங்களிலும் அதிக அளவில் பாரதியின் பாடல்களைப் பாடி அதை பரவலாக்கியவர். அவருடன் எப்போதும் 'பாரதி கவிதைகள்' புத்தகம் இருக்கும். அதை ஒருமுறை வாங்கிப் பார்த்த ஒருவர் புத்தகம் முழுவதும் எல்லா வரிகளும் அடிக்கோடிற்றிருப்பதைப் பார்த்து வியந்து ஜீவாவிடம் ஏன் என்று கேட்டாராம்.  "ஒரு முறை படிக்கும் போது சில வரிகள் சிறப்பாகத் தோன்றும். அப்போது அவற்றை அடிக்கோடிடுவேன். அடுத்த முறை படிக்கும்போது வேறு சில வரிகள். இப்படியே புத்தகம் முழுதும் அடிக்கோடிட்டுவிட்டேன்" என்றாராம் ஜீவா . அஹா...எண்ணி எண்ணி வியக்கிறேன். 

பாரதியின் படைப்புகள் எண்ணற்ற பிரதிகள் கண்டுவிட்டன. பாரதிக்குப்பின் அவர் தாக்கம் இல்லாத எந்த தமிழ் கவிஞனும் இல்லை. பாரதியின் வரிகளை திரைப்படங்களுக்குத் தலைப்புகளாக வைத்தாயிற்று. (சமீபத்திய உதாரணம் - சூது கவ்வும், ஆதலால் காதல் செய்வீர்). எல்லாப் பாடகர்களும் அவர் பாடல்களைப் பாடியாயிற்று. மாறுவேடப் போட்டிகளுக்கு அவர் உருவத்தை Standard ஆக செய்தாயிற்று. சிலை வைத்தாயிற்று. பூஜை செய்தாயிற்று. இன்னும் என்ன செய்ய வேண்டும் பாரதிக்கு?

உண்மைதான். அவன் தன் கவிதைகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பார்த்தான். ஆனால், அதை விட பெரிதாக அவன் ஆசைப்பட்டது தன் மக்கள் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று; அவனைப் போல் உணவில்லாமல் யாரும் சாகக் கூடாது என்று;  பழம் பெருமை பேசியே பாழாகக் கூடாது என்று; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கக் கூடாது என்று; புல், புள், செடி, கொடி, விலங்கு என்று எல்லா உயிரையும் தன்னைப் போல் நினைக்க வேண்டும் என்று; வையத் தலைமை கொள்ள வேண்டும் என்று. இன்னும் எத்தனை எத்தனையோ. அவனுடைய 'புதிய ஆத்திசூடி' முழுவதுமே நமக்கான கட்டளைகள். இவற்றை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமா??

பாரதி யார்?

பாரதியை மகாகவி என்று பலர் சொல்கிறார்கள். 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா', 'பைந்தமிழ்த் தேர்ப் பாகன்', 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாவேந்தர் சொல்கிறார். "இல்லை இல்லை. பாரதி  ஒரு தலைவன். அவன் கவிஞனாகவும் இருந்தான் என்பதுதான் உண்மை" என்று சுகி. சிவம் சொல்கிறார். பாரதி ஒரு சிறந்த இதழாசிரியர் என்று இதழாளர்கள் சொல்கிறார்கள். பாரதி ஒரு விஞ்ஞானி என்று அப்துல் கலாம் சொல்கிறார். அவன் வெறும் இசைப் பாடலாசிரியன் மட்டும்தான் என்று ஜெயமோகன் சொல்கிறார். விடுதலைக் கவி என்று சிலர், நூற்றாண்டுக் கவி என்று சிலர், பிரபஞ்சக் கவி என்று சிலர், பார தீ என்று சிலர். மகாக(கா)வி பாரதி என்று தி. க. வினர்.  

10 நிமிடங்களுக்கு முன்பு ஓஷோவின் புத்தகத்தில் படித்தது இது. ஓஷோ சொல்கிறார், "ஞானமடைந்தவர்கள் யோசிப்பதில்லை, அதற்கு அவசியமில்லை! வாழ்க்கை அவன் முன்னால் என்ன கொண்டு வந்தாலும், அவன் எதிர்கொள்வான்". 

ஒருவேளை, பாரதி ஞானியோ??

யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். யார் இவன்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்