"புரவி" நான்காம் இதழை வாசித்தேன். கடந்த மூன்று இதழ்களையும் விட இந்த இதழ் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் மிக நேர்த்தியாக இருக்கிறது. இந்த இதழில் எழுத்துரு அளவும் வடிவமும் சிறப்பாக இருக்கிறது. வழக்கம்போலவே முன்னட்டை வடிவமைப்பு அற்புதமாக இருந்தது.
சுரேஷ் பிரதீப்பின் "நறுமணம்" சிறுகதையில் வரும் பிரதான பாத்திரம் சுரேஷின் பல கதைமாந்தர்கள் போலவே எரிச்சலடையும், கசப்படையும், உண்மையை எதிர்கொள்ளப் பயப்படும் ஆண் பாத்திரமாகவே இருந்தது; சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கி. ச. திலிபனின் சினிமா குறித்த கட்டுரை மிகுந்த நுட்பமாகவும் திரைப்படத்தைக் கண்டிப்பாக காணவேண்டும் என்கிற உந்துதலையும் ஏற்படுத்தியது. சுனில் கிருஷ்ணனின் நேர்காணல் சட்டென்று முடிந்துவிட்டது. இன்னும் கூட கேள்விகள் கேட்டிருக்கலாம். ஹருகி முரகாமியின் "Kafka on the Shore" நூலை அவரின் பிற படைப்புக்களோடு ஒப்பிட்டு நுட்பமாக அவதானித்த ராம் முரளியின் கட்டுரையும் சிறப்பு. தேவசீமாவின் "வாய் கொள்ளும் அளவு" எனும் கவிதையை வெகுவாக ரசித்தேன். உள் ஓவியங்கள் வரைந்த கௌதம் அவர்களுக்கும் கணேஷ் பாரி அவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாக புரவியின் பாய்ச்சல் முந்தையதை விட சிறப்பாக இருந்தது.
0 கருத்துகள்