கரைந்த நிழல் - குறும்படம் குறித்து.
சமீபகாலமாக குறும்படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் குறும்படம் என்ற பெயரில் ஒளிப்படங்களின் கோவையாக பின்னணி இசையுடன் வெறும் குப்பைகளை யூ-டியூப் போன்ற தளங்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். மாநில, தேசிய, சர்வதேச விருதுகள் பெற்ற குறும்படங்கள் என்று தம்ப் நெயிலில் எழுதி இருக்கிறார்கள். அதை நம்பி உள்ளே சென்று பார்த்தால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பது இல்லை. ஒரு குறும்படத்திற்கான வடிவ ஒழுங்கு இல்லாமல் இருக்கும் இவை எங்கு, எப்படி விருது பெற்றிருக்கும் என்பதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன்.
குறும்படம் என்பதை சிறுகதையோடு ஒப்பிடலாம். நாவலுக்கும் சிறுகதைக்கும் இருக்கக் கூடிய மிக முக்கியமான வேறுபாடு என்பது உச்சகட்ட தருணங்களின் எண்ணிக்கை. நாவலில் பல உச்சகட்ட தருணங்கள் இருக்கும். ஆனால் சிறுகதையில் ஒரே ஒரு தருணம் தான் உச்சகட்ட தருணமாக இருக்கும். இதை அப்படியே குறும்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். குறும்படத்தில் ஒரே ஒரு உச்சகட்ட தருணம்தான் இருக்கும். அதை நோக்கியே அந்த குறும்படம் நகரும். ஆனால் பல ஆண்டு காலமாகவே குறும்படத்தின் இந்த இலக்கணத்தைத் திரைப்படம் கையாள்வது நம்முடைய சாபக்கேடு. பல உச்சகட்ட தருணங்களைத் தருவதற்கு பதிலாக ஒரே ஒரு உச்சகட்ட தருணத்தை நோக்கி மொத்தம் இரண்டரை மணி நேரமும் செல்லும்.
ஒரு சிறுகதையின் இறுதி வரியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் உத்தியை உலகெங்கும் பல எழுத்தாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். தமிழில் சுஜாதா அவர்கள் இதைப் பிரபலப்படுத்தினார். இதே உத்தியை குறும்படங்களிலும் பயன்படுத்துவதை நாம் காண முடியும். ஒரு குறும்படம் 5 லிருந்து 10 நிமிடங்கள் என்றால் அந்த பத்தாவது நிமிடத்தில் நமக்கு ஒரு அதிர்ச்சியோ ஆச்சரியமோ காத்திருக்கும். ஆனால் இது ஒன்றும் குறும்படத்திற்கான கட்டாய விதி அல்ல என்பதை புரிந்து கொண்டவர்கள் மட்டுமே சிறந்த குறும்படங்களை இயக்க முடியும்.
அந்த வகையில் நண்பர் சந்தோஷ் விஜய் அவர்கள் இயக்கிய 'கரைந்த நிழல்' என்ற குறும்படத்தைப் பார்க்கிறேன். சிறப்பான ஒலிப்பதிவு, நடிகர்களின் தேர்வு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என்று பலவகைகளில் இது சிறப்பாகத் தெரிகிறது.
திரைக்கதையில் பெரிய மெனக்கெடல்கள் இல்லை என்றாலும் உணர்வுபூர்வமாக அது பாதிக்கவே செய்கிறது. இந்தக் குறும்படத்தின் இறுதியில் எந்தவித முடிச்சு அவிழ்ப்புகளும் இல்லை. சொல்லப்போனால் படம் தொடங்கும்போதே முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. இந்தக் குறும்படத்தின் வெற்றியாக நான் காண்பது தரவேண்டிய அதிர்ச்சியை அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கதாபாத்திரங்களின் நடிப்பின் மூலமாக தந்துவிடுகிறது. குறிப்பாக படத்தின் மைய கதாபாத்திரமான ஆனந்தின் நடிப்பு.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆனந்தும் வயலினும். ஷெனாயும் வயலினையும் போல சோகத்தை உமிழும் இன்னொரு இசைக்கருவி இல்லை. அதை மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதன் பெரிய குறை அல்லது போதாமை என்று நான் கருதுவது கதை. கதையைவிட திரைக்கதையில் எந்தப் புதுமையும் இல்லை. ஒரு நாடக நடிகன் அல்லது திரைப்பட நடிகன் நடித்துக் கொண்டிருக்கும் போது அவன் எந்தக் காட்சியை நடிக்கிறானோ அது நிஜத்தில் நடப்பது போன்ற காட்சி அமைப்புகளைப் பல படங்களில் பார்த்து விட்டோம். குறிப்பாக அம்மா - மகன் உறவு. சொத்துக்காகத் தாய் தந்தையை உதாசீனம் செய்யும் மகன் பின்னர் வருந்துவது பார்த்துப் பார்த்துச் சலித்து போன கதை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருக்கிறது.
கரைந்த நிழல் என்ற தலைப்பு எவ்வளவு வசீகரமானது! எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
தொடர்ந்து முயலுங்கள் சந்தோஷ். நிச்சயம் சிறப்பான படைப்பை உங்களால் தர முடியும். வாழ்த்துகள்.
சுட்டி:
https://youtu.be/Aj8qt1rnOwY
https://youtu.be/Aj8qt1rnOwY

கருத்துகள்