ராஜ் கௌதமனின் "கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" - நூல் விமர்சனம்
எனக்கு நினைவு தெரிந்து நான் முதன் முதலாகக் கற்றுக்கொண்ட பாடல் வள்ளலாரின் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்ற பாடல் தான். என்னுடைய தாத்தா வள்ளலார் வழி நடப்பவர். விவரம் புரியாத வயதிலிருந்தே வள்ளலார் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. அவர் குறித்து நான் அதிகம் அறிந்துகொண்டதும் விவாதம் செய்ததும் என் தாத்தாவிடம் தான். தாத்தா தத்துவ நிலையில் விளக்குவார். நான் உலகியல் காரணங்களை அடுக்குவேன். வள்ளலார் பற்றிய பெரும்பாலான நூல்களை தாத்தா சேகரித்து வைத்திருக்கிறார். அப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் ராஜ் கௌதமன் அவர்கள் எழுதிய “கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக” என்ற நூலை வாங்கி வந்தார். நான் ராஜ் கௌதமனின் “லண்டனில் சிலுவைராஜ்” என்ற நாவலை முன்பே வாசித்திருந்தேன். இந்த நூல் வள்ளலார் பற்றிய வழமையான கட்டுரை நூலாகவே இருக்கும் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் இது மிக முக்கியமான ஆய்வு நூல் என்பதை வாசித்த பின்பு உணர்ந்தேன்.
ஒரு சிந்தனையாளனை அவனுடைய சமூகம் தான் உருவாக்குகிறது. தன்னுடைய அக அறிதல் மூலமாக அச்சிந்தனையை வளர்த்து அவன் சமூகத்திடம் கொடுக்கிறான். வர்க்க பேதம் நிறைந்த சமூகம் தான் மார்க்ஸை பொதுவுடைமை என்ற சிந்தனையை நோக்கி உந்தியது. வள்ளலார் அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற உபாத்தியாயர்கள், பிரசங்கிகள், ஆன்மிகவாதிகள் அனைவரிடம் இருந்தும் வேறுபட்டு நிற்கிறார். மற்றவர்களைப் போலவே அவர் சைவ சமயத்தில் இருந்து தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினாலும் மரபுகளை ஒரு கட்டத்தில் மீறுகிறார். அதற்கு அவருடைய அகத் தேடல் தான் முதன்மையான காரணம் என்றாலும் புறக் காரணிகளும் அவருடைய சிந்தனைகளை பாதிக்கவே செய்திருக்கின்றன.
பாரதியின் கவிதைகளில் (சுயசரிதை) இருந்தே அவரின் வாழ்வை அணுகும் ஓர் ஆய்வை பாரதி கிருஷ்ணகுமார் செய்திருந்தார். ராஜ் கௌதமனின் இந்த நூலும் வள்ளலாரின் பாடல்களைக் கொண்டே அவரை உளப் பகுப்பாய்வு செய்கிறது. ஒரு சிந்தனையாளனை அவன் வரிகளில் அல்லாது வேறு எப்படி அறிய இயலும்? அந்த வகையில் வள்ளலாரின் வரிகள் ராஜ் கௌதமனுக்கு பெரிய அளவில் உதவி இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏழு தலைப்புகளில் இந்த ஆய்வை அவர் மேற்கொள்கிறார். முதல் அத்தியாயத்தில் வள்ளலார் காலத்து தமிழகப் பண்பாட்டு வரலாற்றை ஒரு கோட்டுச்சித்திரம் போல அளிக்கிறார். சைவ சமயத்தின் இறுகிய நிலையையும் புதிதாக மேலெழும்பி வந்த ஆங்கிலக் கல்வி முறையினால் படித்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மனப்பாங்கையும் அன்றைய வித்துவான்களின் நிலையையும் விளக்குகிறார். அந்தக் காலத்து வித்துவான்கள், பிரசங்கிகள் பற்றிய தகவல்களையும் சித்திரங்களையும் உ.வே.சா வின் நூல்கள் மூலமாகவே அவர் பெறுகிறார். சிந்திக்கும் போது உ.வே.சா வின் பதிவுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர முடிகிறது. வள்ளலார் மீது நாவலர் கொண்ட வெறுப்பையும் அவர் அதை எப்படியெல்லாம் வெளிப்படித்தினார் என்பதையும் இந்த அத்தியாயத்தில் மிக விரிவாகவே தருகிறார்.
இரண்டாவது அத்தியாத்தில் வள்ளலாரின் தொடக்க கால சிந்தனைகள் அவருடைய முன்னோடிகளான திருமூலர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர் போன்றவர்களால் வார்க்கப்பட்டன என்பதை பல வரிகள் மூலம் நிறுவுகிறார். அவருடைய சமகாலத்து வித்துவாங்கள் பலரையும் போலவே வள்ளலாரும் பாடல் புனைவதில் சாகசங்கள் நிகழ்த்தியுள்ளார். அதே நேரம் அவருடைய அக மனம் தொடக்கத்திலிருந்தே வேறு ஒன்றைத் தேடியிருக்கிறது. அது அறம் சார்ந்த தேடல். மூன்றாவது அத்தியாயம் அவருடைய பாடல்கள் பொதுவாக எப்படியிருக்கின்றன, எவையெவை குறித்து பாடல் புனைந்துள்ளார் என்பதாக இருக்கிறது.
அடுத்த இரண்டு அத்தியாயங்களான சி. இராமலிங்கரின் ஆன்மிகப் பயணம் – 1 மற்றும் 2 இல் வள்ளலாரின் ஆன்மிகப் பயணம் குறித்து ஒரு வரைபடம் தீட்டுகிறார். இந்த இரண்டு அத்தியாயங்களும் தான் இந்த நூலின் சாதாரண பகுதிகள் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், வள்ளலாரின் ஆன்மிகப் பயணம் என்று சொல்லும் போது முதல் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை அவருடைய சிந்தனை போக்கு எவ்வாறு மாறி வந்திருக்கிறது என்று விளக்குவது மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். “வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம்” என்ற வள்ளலாரின் கூற்றை வைத்து அவருடைய மனப் போக்கை அறிய முயல்கிறார். அந்த வரி முக்கியமான வரி என்றே நினைக்கிறேன். அதே சமயம், அனைத்தையும் புறவயமாக விளக்கமுடியுமா என்று தெரியவில்லை. ராஜ் கௌதமனும் அந்த முயற்சியில் இறங்கவில்லை. உட்பொருள் இருக்க சாத்தியமான இடங்களையெல்லாம் அவர் விளக்காமல் தவிர்த்தேவிடுகிறார். “இது குறித்து ஆராய்வது நமக்கு நோக்கமில்லை” என்கிறார். எனில், வள்ளலாரின் சூட்சமப் பொருள் பொதிந்த பாடல்களை விளங்கிக் கொள்ளாமல் அவரை எப்படி முழுமையாக பகுப்பாய முடியும்?
தன்னுடையது மோச உரை அல்ல, தான் சொல்வது சத்தியம், தன்னால் இறந்தவரை எழுப்ப முடியும், தானும் இறக்கப் போவதில்லை என்று வள்ளலார் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. அவருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது என்பதை ராஜ் கௌதமன் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இறுதி அத்தியாயம் மிகவும் சுவாரசியமானப் பகுதி. வள்ளலாரின் ஆளுமைகளை விளக்கும் பகுதி. இந்தப் பகுதிக்கு ராஜ் கௌதமனின் ஆய்வு முறை பொருந்தி வருகிறது. வள்ளலாருடைய ஆளுமை வியக்க வைக்கிறது. பயம் பூஜ்யம் என்று சொன்ன வள்ளலார்தான் தான் எல்லாவற்றுக்கும் பயந்தவர் என்றும் சொல்கிறார். இரண்டு பயங்களும் வேறு. அவருடைய பயம் கருணையினால் வருவது. மலரினும் மெல்லிது அவர் மனம். அதே சமயம், ஒரு கொதி கலன் போல அவருடைய உள்ளம் வேறொன்றைத் தேடியிருக்கிறது. அவருடைய மனத்தை மேலை தத்துவங்கள் கொண்டு பகுப்பாய்வது ஓரளவுக்குத்தான் சாத்தியம் என்பதை நூலை வாசித்து முடித்த போது உணர்ந்தேன்.
இன்னொன்றையும் சொல்லத்தான் வேண்டும். வள்ளலார் போன்ற சிந்தனையாளரை, ஆன்மிகவாதியை தெய்வ நிலைக்கு உயர்த்தி அவர் மனிதரே இல்லை என்ற சித்திரத்தை உருவாக்குவதும் சரியல்ல. இது போன்ற பகுப்பாய்வு அவசியம். ஆத்திகர்கள் வழிபடும் வள்ளலாரையும் நாத்திகர்கள் கொண்டாடும் வள்ளலாரையும் கடந்த இன்னொரு வள்ளலார் இருக்கிறார். வள்ளலார் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் “நடுநின்ற நடுவானவர்”. அந்த வள்ளலாரைக் கண்டடையும் முயற்சியில் ஆய்வு செய்யப்பட்டுள்ள இந்த நூல் வள்ளலார் குறித்த ஆய்வு நூல்களில் மிக முக்கியமான நூல்.
பி.கு: 2018ஆம் ஆண்டுக்கான "விஷ்ணுபுரம் விருது" ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கருத்துகள்