மகன் அதியன் அருட்பொழில் பிறந்தவுடன் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதிலொன்று அவனுக்காகவும் எனக்காகவும் சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பது. அந்தப் புத்தகங்கள் அவன் பிறந்த மாதத்தில் வாங்கியுள்ளதால்
அது எப்போதும் பசுமையான நினைவாக பின்னாளில் எனக்கும் அவனுக்கும் இருக்கும்.
அதியன் பிறந்த மே மாதத்தில் கீழே சொல்லியிருக்கும் ஆறு நூல்களை இணையம் மூலமாக வாங்கினேன்.
நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் கூட கிடைக்கவில்லை. அங்கே விசாரித்த போது விஷ்ணுபுரம் வலைதளத்தில் கிடைக்கும் என்றனர்.
எனவே இந்த ஆறு நூல்களையும் விஷ்ணுபுரம் வலைதளத்தில் வாங்கி இருக்கிறேன். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்: மிக அற்புதமான, நேர்த்தியான பேக்கேஜிங் (நல்ல தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. பொதிதல், கட்டுதல் என்பதெல்லாம் இணையான சொல்லாகத் தோன்றவில்லை). சிறு பிசிறு கூட இல்லாத, எந்தவித பாதிப்பும் இல்லாத அந்நூல்களை கைகளால் பிரித்துப் பார்த்தபோது மிகுந்த மனநிறைவை அடைந்தேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு இதற்காகவே நன்றி சொல்லலாம். மேலும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு புக் மார்க்கும் கொடுத்திருந்தனர்.
ஆறு புத்தகங்களில் ஜெயமோகன் எழுதிய "உடையாள்" எனும் அறிவியல் புனைநாவலும் "டோட்டோசான்" என்ற ஜப்பானிய நூலின் மொழிபெயர்ப்பும் ஆகிய இந்த இரண்டு நூல்களை அதியனுக்காகவும் மீதமுள்ள நான்கு நூல்களை எனக்காகவும் வாங்கி உள்ளேன்.
நான்கு நூல்களில் மூன்று வேற்று மொழிகளில் வெளிவந்த மிக மிக முக்கியமான இந்திய நாவல்கள். ஒன்று (கோவில் யானை) மலையாள செவ்வியல் நாடகம்.
நூல்களை வாசித்தபின்பு அவைகுறித்து எழுத வேண்டும். இப்போதைக்கு நூல் பட்டியலும் அந்நூல்களின் blurb-இல் உள்ள நூல் குறித்த அறிமுகமும்.
1. உடையாள் (அறிவியல் புனைநாவல்) (தமிழ்) - ஜெயமோகன்
இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல் கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்தக் கதையின் வழியாக மனிதனைப் பற்றிய சில அடிப்படையான தத்துவக் கேள்விகளையும் எழுப்பிக்கொள்கிறது. இளமையிலேயே இப்படி தத்துவக் கேள்விகளை குழந்தைகள் சந்திப்பது அவசியம். அவை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும் தேடலை உருவாக்கும். தத்துவத்திலும் கதையிலும் ஆர்வம் கொண்ட பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகளுக்குரிய எளிய நேரடி நடையில் எழுதப்பட்ட கதை இது. கற்பனையான ஓர் உலகில் திளைத்து வாழ்வதற்கு அழைத்துச் செல்வது.
2. டோடோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி (ஜப்பானிய மொழி) - டெட்சுகோ குரோயாநாகி
நான் டோமோயி பற்றி எழுத இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால் டோட்டோ-சானைப் போன்ற ஒரு சிறுமி பெரியவர்களின் மிகச்சரியான வழிகாட்டுதலுடன் மற்றவர்களுடன் கூடிப்பழகும் வகையில் நல்ல பெண்ணாக எப்படி வளர்ந்தாள் என்பதை மற்றவர்கள் உணரச் செய்தால் அதுவே போதுமானது.
குழந்தைகளை பலவந்தப்படுத்தல் குறைவாகவும், இடை விலகல் அதிகமில்லாமலும் டோமோயியைப் போன்ற பள்ளிகள் இப்போதும்கூட இருக்கலாம். ஆனால் டோமோயி பள்ளியில் பள்ளிநேரம் முடிந்த பின்னரும்கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. அதேபோல், காலையில் பள்ளிக்கு வர அதிகநேரம் தாமதிப்பதும் இல்லை. டோமோயி பள்ளி அப்படிப்பட்ட தனிச்சிறப்புடையது.
வியக்கத்தக்க இத்தகைய ஒரு பள்ளியை அமைக்கும் தொலை நோக்கமும் உற்சாகமும் கொண்ட திரு. கோபயாஷி, 1893 ஜூன் 18இல் டோக்கியோவுக்கு வடமேற்கே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். குழந்தைகளின் சுய மரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்கப் போதிய அளவுக்கு சுதந்திரமான பாடத்திட்டம்; குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட வகுப்பு; காலை வேளைகளில் கற்பித்தல், மாலையில் உலாவச் செல்லுதல், தாவரங்கள் சேகரித்தல், படம் வரைதல், பாடுதல் ஆகியவற்றைக் கொண்ட தனது சிறப்பு முறையின்மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார் கோபயாஷி. அப்படியொரு பாடத்திட்டத்தைக் கொண்ட டோமோயி பள்ளியை உருவாக்கினார். டோமோயி தற்போது இல்லை. டோமோயி பள்ளி தற்போது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தபின் உங்கள் நினைவில் டோமோயி நிற்குமானால் அதுவே எனக்குப் பெரு மகிழ்ச்சியாகும்.
இந்த நூல் ஜப்பானில் வெளியானபிறகு ஆங்கிலத்தில் வெளி வரும் முன் குறிப்பிடத்தக்க பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன. ஒரே ஆண்டில் 45 லட்சம் பிரதிகள் விற்பனையாக, ஜப்பானின் நூல் வெளியீட்டு வரலாற்றில் சாதனை படைத்தது.
3. கோவில் யானை (மலையாளம்) - ஓம்சேரி என்.என். பிள்ளை
கேரளத்தின் பிரச்சாரக் கலைகளில் ஒன்றான கதாகாலட்சேபத்தை அடிப்படைக் கருவியாகப் பயன்படுத்தி இந்நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கத்திய சார்பும் உண்டு. மரபு வழியும் உண்டு. இந்தியப் பாரம்பரியத்துக்கு ஏற்ப அபத்தவியல் (அப்ஸர்டிசம்) விமர்சிக்கப்படுகிற அடையாளமும் உண்டு. ஒரு யானையின் படிமத்தை மேடைக்குக் கொண்டு வந்து, அதைக் கதாபாத்திரங்களுக்குச் சமமாக மேடையில் உலவும் ஒரு கதாபாத்திரமாக்கி, உச்சகட்டத் திருப்புமுனை வரையிலும் இயங்கச் செய்ததன் மூலம் மிகப்பெரிய கலை நுட்பத்தை ஓம்சேரி இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். கேசவன் என்ற உயிருள்ள யானை ஒன்று உண்மையாகவே இந்த நாடகத்தில் பங்கு கொண்டிருக்கிறது என்பது போல நாடகம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் அந்தநுட்பம் செயலாக்கப்பட்டுள்ளது.
நாடகக் கவிஞராக இலக்கிய வாழ்க்கையைத் துவக்கிய ஓம்சேரி, தனது படைப்பாற்றலின் மூலம் மலையாள இலக்கியத்தை வளமுறச் செய்யும் நம்பிக்கையுடன் நாடகத் துறையில் நுழைந்தார். 1957இல் வெளிவந்த 'ஒப்பத்தினொப்பம்' (சரிக்குச்சரி) என்ற ஓரங்க நாடகத் தொகுப்புதான் அவரை மலையாள நாடகத் துறையில் நம்பிக்கைக்கு உரியவராகப் புலப்படுத்தியது. அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 'தைவம் மீண்டும் தெற்றித் தரிக்குன்னு' என்ற புகழ்பெற்ற ஓரங்க நாடகத் தொகுப்பு வெளி வந்தது. இவரது நாடகங்கள் ஒவ்வொன்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் வெளியிடப்படுகின்றன. அதுவும் மேடையில் அரங்கேற்றப்பட்டு, பத்திரிகைகளின் விமர்சனப் பகுதிகளில் பாராட்டுகளுக்கு உள்ளான பிறகுதான் நூலாக வெளி வருகின்றன.
தமிழாக்கம் செய்துள்ள இளம்பாரதி, உம்மாச்சு, மய்யழிக் கரையோரம் உள்ளிட்ட பல நூல்களை நேஷனல் புக் டிரஸ்டுக்காக மொழியாக்கம் செய்துள்ளார்.
4. கங்கைப் பருந்தின் சிறகுகள் (அஸ்ஸாமிய மொழி) - லக்ஷ்மிநந்தன் போரா
நம் கிராமங்களில் பன்னெடுங்காலமாக நிலவிவரும் இயற்கையோடு இயைந்த நிதானமான வாழ்க்கை, எளிய நம்பிக்கைகள், நெறிமுறைகள் ஆகியவை எந்திர நாகரிகத்தின் வரவினால் சிதைந்து விடுகிற சோகம் அஸ்ஸாமிய நாவலாசிரியர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. இந்த நாவல் இச்சோகத்தை மிக எதார்த்தமாகப் பதிவாக்கியிருப்பதன் மூலம் இத்தகைய முயற்சிகளில் சிறப்பிடம் வகிக்கிறது. புறச்சூழல்களின் மாற்றங்களுடன் நாவலின் நாயகி வாசந்தியின் துயரம் நிரம்பிய வாழ்க்கையின் இழைகள் நேர்த்தியாக உடன் இணைக்கப்பட்டுள்ளன. வாசந்தியின் சோகத்தில் வாசகர் உள்ளம் நெகிழ்ந்து ஒன்றிப்போகையில், சுற்றுப்புற மாற்றங்களின் சோகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
5. அக்கினி சாட்சி (மலையாளம்) - லலிதாம்பிகா அந்தர்ஜனம்
லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய இந்த நாவல் -அக்கினி சாட்சி - 1977ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நம்பூதிரிப் பெண்களின் அவல நிலையை அப்பட்டமாக நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது இப்புதினம். இந்நூலில் நனவோடை உத்தியையும், கவிதை தளும்பும் நடையையும் திறம்படக் கையாண்டுள்ளார் இதன் ஆசிரியை.
லலிதாம்பிகா அந்தர்ஜனம் (1902-1987) நம்பூதிரி சமூகத்தின் புகழ்மிக்க படைப்பாளிகளில் ஒருவர், பல பரிசுகள் பெற்றவர். பல சிறுகதைகள் எழுதியுள்ள இந்நூலாசிரியை கேரள சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவராகப் பணி ஆற்றியுள்ளார்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ள சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறந்த கவிஞர். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர். கவித்துவம் நிறைந்த வாழ்க்கைச் சித்திரிப்பு, பதிய உருவம், புதிய நடை, போலித்தனம் மற்றும் படாடோபமற்ற விவரிப்பு - இவையே இவரது கோட்பாடுகள் எனலாம். இவரது தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், தமிழ் வாசகர்களை ஆட்கொள்ளும் என்றால் மிகையாகாது.
6. பன்கர்வாடி (மராத்தி) - வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர்
மேய்ப்பவர்களின் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட இந்நாவல், இவர்களுடைய துன்பங்கள், அச்சமின்மை, ஏழ்மை, அறியாமை, இயற்கையின் சோதனை, சீர்குலைவு, மனிதத்தன்மை, புல்லும் கோரையும் வேய்ந்த கூரைக் குடிசைகள்-இவை யாவற்றையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இயற்கையின் உள்ளார்ந்த கடுமையான சட்டதிட்டங்களும், அவற்றோடு இணைந்த மனித நியதியின் விசித்திரங்களும் இந்நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. பிரபல மராத்தி எழுத்தாளர் வெங்கடேஷ் மாட்கூல்கரின் மிகச்சிறந்த நாவல் இது. 1995இல் திரைப்படமாகவும் வெளிவந்து, 1996ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001), அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 திரைப்பட வசனங்கள், நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து மராட்டிக்கு மொழியாக்கமும் செய்தார்.
தமிழாக்கம் செய்தவர் உமா சந்திரன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். இவர் எழுதிய ‘முள்ளும் மலரும்' நாவல் 1967இல் கல்கி இதழின் வெள்ளிவிழாப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதுவே பிறகு திரைப்படமாக வெளிவந்து பெரும் புகழ் பெற்றது. வானொலியில் பணியாற்றிய உமாசந்திரன், ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர்.
கருத்துகள்