பாபநாசம் கிளை நூலகத்தில் புத்தகங்களை மாற்றச் சென்றபோது ஓர் அறிவிப்பு கண்ணில் பட்டது: 'மோசமான நிலையில் உள்ள புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்'.
பதிப்பித்து 20 ஆண்டுகளுக்கு மேலான, கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கும் நூல்களை குறைந்த விலைக்கு விற்க அரசு பொது நூலகங்களுக்கு அனுமதி உண்டு. மேலிடத்தில் அதற்கான அனுமதி பெற்று அப்படி விற்கலாம்.
அந்த அறிவிப்பைப் பார்த்த சில நாளில் மீண்டும் நூலகத்துக்குச் சென்று வேண்டிய நூல்களை ஒவ்வொரு கட்டாகப் பிரித்துத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினேன். எல்லா நூல்களிலும் அட்டை கிழிக்கப்பட்டிருந்தது. எனவே உள்ளே தலைப்பைப் பார்த்துத்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் செலவழித்து அனைத்துக் கட்டுகளையும் பிரித்து நூல்களைத் தேர்ந்தெடுத்தேன்.
அப்படி மொத்தம் 44 நூல்கள் கிடைத்தன. பெரும்பாலும் மிக முக்கியமான நூல்கள். நூல் பட்டியல் கீழே:
நாவல்கள்
1. ஜே ஜே: சில குறிப்புகள் — சுந்தர ராமசாமி
2. 1084இன் அம்மா — மகாசுவேதா தேவி
3. பாசத்தீ — மேலாண்மை பொன்னுச்சாமி
4. சிதம்பர ரகசியம் — பூரணச்சந்திர தேஜஸ்வி
5. அவன் ஆனது — சா. கந்தசாமி
சிறுகதை தொகுப்புகள்
6. பறவை யுத்தம் — பா. ராகவன்
7. மனப்பூ — மேலாண்மை பொன்னுச்சாமி
8. பாரதி கதைக் களஞ்சியம் — பாரதியார்
9. அறிஞர் அண்ணாவின் குட்டிக் கதைகள் — அண்ணா
10. புஷ்பப் பல்லக்கு — கல்கி
11. அன்பின் விருது (சிறுவர் கதைகள்) — கண்ணாடி ராசேந்திரன்
12. அனுபவங்கள் அர்த்தமுள்ளவை — தென்கச்சி கோ. சுவாமிநாதன்
13. இன்னொரு பக்கம் — தேவகாந்தன்
14. மாஸ்தி சிறுகதைகள் — மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்
15. சுதந்திர தின மிட்டாய் (சிறுவர் நீதிக் கதைகள்) — குழ. கதிரேசன்
16. தக்கையின் மீது நான்கு கண்கள் — சா. கந்தசாமி
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, இலக்கியம் மற்றும் பிற நூல்கள்
17. வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும் — முனைவர் பி. சரசு
18. திருக்குறள் இன்பம் — யோகி சுத்தானந்த பாரதியார்
19. முருகன் அல்லது அழகு — திரு. வி. க.
20. சுபமங்களா நேர்காணல்கள் — கோமல் சுவாமிநாதன் & இளையபாரதி
21. பகவத் கீதை — ஒரு தரிசனம் — ஓஷோ
22. நான் உனக்குச் சொல்லுகிறேன் (பாகம் 1) — ஓஷோ
23. தெக்கத்தி ஆத்மாக்கள் — பா. செயப்பிரகாசம்
24. ஞாபக நதிக்கரையில் — இயக்குநர் பாரதிராஜா
25. தமிழ் முழக்கம் — பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை
26. புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள் — தொகுப்பு: முல்லை முத்தையா
27. சாது அப்பாத்துரையின் தியானதாரா — பிரமிள்
28. மகாகவி பாரதி வரலாறு — சீனி. விசுவநாதன்
அடிப்படை அறிவியல் தொடர் — 16 நூல்கள்
29. காற்று
30. பூமி
31. மின்சாரம்
32. விசைகளும் அளவுகளும்
33. வெப்பம்
34. ஒளி
35. உயிரினங்கள் — விலங்குகள்
36. உயிரினங்கள் — மனிதன்
37. உயிரினங்கள் — தாவரங்கள்
38. காந்தம்
39. ஒலி
40. நீர்
41. பிராணிகளும் அவற்றின் குட்டிகளும் குஞ்சுகளும்
42. விண்வெளியும் மனிதனும்
43. கடலில் உயிரினங்கள்
44. அணுக்கள்
நூல்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவற்றின் அட்டைகள் குறித்து விசாரித்தேன். அவை பெரும்பாலும் மழையில் நனைந்தவை, மோசமான நிலையில் இருப்பவை என்பதால் தனியே வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
“பரவாயில்லை, ஒரு நாள் வந்து தேறுவதை எடுத்துக்கொள்கிறேன்” என்றேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலையில் நானும் தங்கை பவித்ராவும் நூலகத்திற்குச் சென்றோம்.
இரண்டு சாக்குப் பைகளில் இருந்த நூலட்டைகளைக் கொட்டி ஒவ்வொன்றாகப் பார்த்து, பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்துவிட்டோம். எதிர்பார்த்ததைவிட சேதம் குறைவாகவே இருந்தது.
ஆனால் ஐந்து நூல்களுக்கு அட்டை கிடைக்கவில்லை. அவற்றுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, இருக்கவே இருக்கிறான் நம் 'சிட்டி' ChatGPT.
“உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் ஆலம்பனா” என்றான்.
நூலின் பெயரை இணையத்தில் தேடி, கிடைத்த அசல் அட்டைப்படங்களைப் பதிவிறக்கிக் கொண்டேன். அவற்றை ChatGPT-யிடம் கொடுத்து, தரத்தை மேம்படுத்திக் கேட்டேன். அவன் அழகாகச் செய்துகொடுத்துவிட்டான்.
‘புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்’ என்ற நூலுக்கு இணையத்திலும் அட்டைப்படம் கிடைக்கவில்லை. அதை நீயே வடிவமை என்று Gemini-யிடம் மேலோட்டமான prompt கொடுத்தேன். அவனும் நல்ல பயல்தான். எதிர்பார்த்த மாதிரியே செய்து கொடுத்தான்.
எல்லாவற்றையும் பிரிண்ட் அவுட் எடுத்து, கனமான அட்டைகளில் ஒட்டி, அட்டை இல்லாத நூல்களையும் சரி செய்துவிட்டேன்.
ஒருவழியாக அனைத்து நூல்களுக்கும் அட்டை கிடைத்தது நிம்மதியாக இருந்தது.
எல்லா நூல்களுமே 1999 ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்புகள். அன்றைய விலை ₹2,000. இப்போது வெளிவந்திருக்கும் இதே நூல்களின் புதிய பதிப்புகளின் விலை பெரிய அளவில் வேறுபடுகிறது. நிச்சயம் இந்த நூல்கள் அனைத்தும் இன்றைய விலையில் ₹4,000-க்கு குறையாமல் இருக்கும்.
ஆனால், நூலகத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட தொகை வெறும் ₹550.
நான் புதிய நூல்களையே அதிகம் வாங்கியிருக்கிறேன். அதன் காரணம் பழைய நூல்களின் மீது விருப்பமின்மை என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு முறை பழைய நூல்களை வாங்கியபோது, உண்மையான விலையைவிட அதிகமான விலைக்கு வாங்கி ஏமாந்த அனுபவம்தான் அதற்குக் காரணம்.
ஆனால் இது பொது நூலகம் என்பதால், இந்த முறை எந்தத் தயக்கமும் இல்லாமல் வாங்கினேன்.
பொது நூலகங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல் ஒன்றைப் பற்றி இங்கு பேச வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் போல பெரிய நூலகங்களுக்கு புதிய நூல்களைச் சேர்ப்பதிலும் பழைய நூல்களைப் பராமரிப்பதிலும் ஓரளவுக்கு இடவசதி இருக்கிறது. ஆனால் ஊர்ப்புற மற்றும் கிராமப்புற நூலகங்களின் நிலை அப்படியல்ல. அவை பெரும்பாலும் சிறிய கட்டிடங்களில் இயங்குகின்றன.
புதிய நூல்கள் தொடர்ந்து வந்து சேரும்போது, அவற்றை முறையாக அடுக்கி வைப்பதற்கே இடம் போதாமல் ஆகிறது. மேலும் மழை, வெப்பம் போன்ற காரணங்களாலும் போதிய பராமரிப்பு இல்லாமையாலும் பழைய நூல்கள் சேதமடைகின்றன. இதனால், பல ஆண்டுகளான நூல்களை அகற்றி புதிய நூல்களுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு பழைய நூல்களை விற்பதன் மூலம் சில அரிய நூல்கள் வாசகர்களின் தனிப்பட்ட நூலகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது (எனக்குக் கிடைத்ததைப் போல).
ஆனால் மறுபுறம், அந்த நூல்களைப் பொது நூலகத்தில் பயன்படுத்தி வந்த வாசகர்கள் அவற்றை இனி அணுக முடியாத நிலையும் உருவாகிறது.
எனவே, ஒரு நூலை நூலகத்திலிருந்து அகற்றுவதற்கு முன், அது இன்னும் வாசகர்களுக்குத் தேவையானதா என்பதை மதிப்பிடும் நடைமுறை இருக்க வேண்டும். (இது குறித்து மேலும் சிந்தித்தால் தெளிவான வரையறையை உருவாக்க முடியும்.) இன்னொன்றும் செய்யலாம். விற்பனைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முக்கியமான நூல்களுக்கு, அதே நூலின் புதிய பதிப்பை நூலகம் வாங்குவதற்கான முறையை அரசு கொண்டு வர வேண்டும்.
அதேபோல், காலத்திற்கேற்பவும், வாசகர்களின் தேவைக்கேற்பவும் சிறிய நூலகங்களின் கட்டிடங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பழைய நூல்களை விற்பது (அல்லது நூலகத்தில் இருந்து அகற்றுவது) நிர்வாகத் தேவையாக இருக்கலாம்; ஆனால் அவை வாசகர்கள் அணுக முடியாதது போல் ஆகி விடக்கூடாது. ஏனென்றால் கிராமப்புற, ஊர்ப்புற வாசகர்களுக்கு இந்நூலகங்களின் தேவை மிக அதிகம்.
தமிழக அரசும் நூலகங்களும் இணைந்து இது குறித்துச் சிந்திக்கலாம்.
கருத்துகள்